ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத பிரச்சார பிரமுகர் சுனில் அம்பேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) ஆண்டுக் கூட்டம் இந்த ஆண்டு மார்ச் 12 முதல் 14 வரை ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள சமல்காவில் நடைபெறும். சங்கத்தின் முந்தைய ஆண்டு செயல்பாடுகள் இக்கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்படும். அடுத்த ஆண்டுக்கான உத்திகள் மற்றும் செயல்திட்டங்கள் வகுக்கப்படும். மூன்று நாள் கூட்டத்தில் காரியகர்த்தர்களை உருவாக்குதல், அவர்களின் பயிற்சி, அத்துடன் ஆர்.எஸ்.எஸ் ஷிக்ஷா வர்கங்களின் (வருடாந்திர முகாம்கள்) திட்டமிடல் மற்றும் அமைப்பு பற்றி விவாதிக்கப்படும். அகில பாரதிய பிரதிநிதி சபா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விரிவாக்கத் திட்டம் (சங்கம் 1925 இல் உருவாக்கப்பட்டது) மற்றும் அதன் திட்டங்களையும் செயல்களையும் வலுப்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யும். இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய பிரச்னைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே மற்றும் அனைத்து துணை பொதுச் செயலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். தேசிய செயற்குழு உறுப்பினர்கள், மண்டல மற்றும் மாநில நிர்வாகிகள், ஏ.பி.பி.எஸ்’ன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பிரதிநிதிகள், அனைத்து விபாக் பிரசாரகர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் போன்ற அழைப்பாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுமார் 1,400 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.