மும்பை கடற்கரையில், சொகுசு கப்பலில் நடைபெற்ற போதைப் பொருள் விருந்தில் கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், போதைப் பொருளை வைத்திருந்ததாகவும் தேசிய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு (என்.சி.பி) அதிகாரிகளால் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். ஆர்யன் கானின் ஜாமீன் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆர்யன் கான் தொடர்பான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் என்.சி.பி’யின் முக்கிய சாட்சியான 37 வயதாகும் பிரபாகர் சைல், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். என்.சி.பி சாட்சியான, கே.பி கோசாவியின் மெய்க்காப்பாளர் என்று கூறப்படும் பிரபாகர் சைல், ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பிறகு, 25 கோடி ரூபாய் ஊதிய ஒப்பந்தம் குறித்து கோசாவி விவாதித்ததைக் கேட்டதாக ஒரு வாக்குமூலத்தில் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தினர் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.