ஆம் ஆத்மி கட்சி விதி மீறி ரூ.7 கோடி வெளிநாட்டு நிதி பெற்றது: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

கடந்த 2014 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்ஆம் ஆத்மி கட்சி விதிமுறைகளை மீறி ரூ.7.08 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளதாகஅமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இதுதொடர்பான ஆவணங்களுடன் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்: பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ சுக்பால் சிங் கைரா உள்ளிட்ட பலர் போதை மருந்து கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பணப் பரிமாற்றம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போதுஆம் ஆத்மி கட்சி வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டிய தகவல் அமலாக்கத் துறைக்கு கிடைத்துள்ளது. வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை (எப்சிஆர்ஏ) சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (ஆர்பிஏ) மற்றும் இந்தியதண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகியவற்றை மீறி ஆம் ஆத்மி கட்சி ரூ.7.08 கோடியை வெளிநாடுகளிலிருந்து பெற்றுள்ளது.
அமலாக்கத் துறை ஆவணங்களின்படி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் உள்ளிட்ட நாடுகளிலில் உள்ள பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து ஆம் ஆத்மி கட்சி இந்த நிதியைப் பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள்அனிகேத் சக்சேனா, குமார் விஸ்வாஸ், கபில் பரத்வாஜ், துர்கேஷ் பதக் ஆகியோர் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்களில் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. எப்சிஆர்ஏ கட்டுப்பாடுகளை தவிர்ப்பதற்காக ஆம் ஆத்மி கணக்குகளில் நன்கொடையாளர்களின் அடையாளங்களை மறைத்து அமெரிக்கா, கனடாவில் பிரச்சாரங்கள் மூலம் நிதி திரட் டப்பட்டுள்ளது.
பல நன்கொடையாளர்கள் ஒரே பாஸ்போர்ட் எண், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடையளிக்க பயன்படுத்தி உள்ளதாக அமலாக்கத் துறையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.