”தொடரும் ஜாதிய ஒடுக்குமுறை சம்பவங்களால், தென் மாவட்டங்கள் ஆபத்தான சூழலை நோக்கி செல்கிறன” என, புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். நெல்லையில் அவர் அளித்த பேட்டி:
நெல்லை, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சமீபமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இச்சம்பவங்கள் பெரும்பாலும் ஜாதிய ஒடுக்கு முறை சம்பவங்களாக உள்ளன. இரு தரப்பினர் மோதலாக இல்லாமல், ஒரு தரப்பினர், சாதாரண ஏழை, எளிய மக்கள் மீது நிகழ்த்தும் வன்முறை சம்பவங்களாக உள்ளன.
சாதாரண மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இளைஞர்கள், பள்ளி மாணவர்களே இந்த செயலில் ஈடுபடுகின்றனர். நாங்குநேரியில் மாணவர் சின்னத்துரை மீதான தாக்குதலை வெளிக்கொண்டு வந்ததற்காக நாங்குநேரி தனியார் ‘டிவி’ நிருபர் கடை மீது பள்ளி மாணவரால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. மொத்தத்தில் தென் மாவட்டம் ஆபத்தான சூழலை நோக்கி செல்கிறது. சமீபத்தில், வல்லநாடு அருகே மணக்கரை கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். பாளை கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி நான்கு மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார்.
மணிமூர்த்தீஸ்வரத்தில் பட்டியல் இன இளைஞர்கள் இருவருக்கு மனித உரிமை மீறலும், அவமானமும் நடந்தது. இதுபோன்ற விஷயங்களை நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டினாலும், அதை தடுக்க தமிழக அரசிடம் எந்த ஆக்கப்பூர்வ செயல்வடிவமும் இல்லை. எந்த சம்பவம் நடைபெற்றாலும், போலீசார் வழக்கு பதிவு செய்வது, நான்கு பேரை கைது செய்வதோடு முடிந்துவிடுகிறது. மணக்கரை கிராமத்தில் திட்டமிட்டு சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களின் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்தோடு வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக காவல் துறை மட்டும் விசாரணை நடத்தினால் தீர்வு ஏற்படாது. மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும்.
ஜாதி ரீதியான ஒடுக்கு முறைக்கு உள்ளான பகுதிகளில் மத்திய, மாநில அரசு இணைந்து விசாரணை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும். இது தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் நடத்த வேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார்.