தெலுங்கு ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது: ஆந்திராவில் உள்ள தற்போயை மாநில அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என எனக்கு நம்பிக்கை இல்லை. மாநில பொருளாதாரம் மோசமாக உள்ளது. ஜெகன் மோகனை சாத்தியமான கூட்டாளியாக நாங்கள் கருதவில்லை.
இருப்பினும் பார்லிமென்டில் குறிப்பிட்ட சில விஷயங்களில் ஓய்எஸ்ஆர்சிபி கட்சி எம்.பி.,க்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தனர்.அரசியல்சாசன பதவியை வகிக்கிறேன். யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என பார்க்காமல், அனைத்து மாநிலங்களையும் வலிமை ஆக்குவது எனது பொறுப்பு.
மற்ற மாநிலங்களோடு சேர்த்து ஆந்திராவையும் வளர்ச்சி பெற உறுதி பூண்டுள்ளேன். அதுவே எனது அரசியல்சாசன கடமை. இந்த தேர்தலில் பா.ஜ.,வும் தெலுங்கு சேதமும் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. ஜனசேனா எங்களுடன் உள்ளது. எங்களது கூட்டங்கள், பேரணி மற்றும் ரோடு ஷோவிற்கு கூடும் மக்களை பார்க்கும் போது, தேஜ., கூட்டணியானது லோக்சபாவில் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும். தேசிய கட்சிகள், என்ற முறையில் நாம், மாநில கட்சிகளின் எதிர்பார்ப்புகளை சரி செய்ய வேண்டும் என்பது எனது நம்பிக்கை. மாநில கட்சிகள் நம்முடன் இருந்தால், அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு உழைப்பதற்கு எளிதாக இருக்கும். தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இன்னும் பல கட்சிகள் எங்களுடன் கை கோர்க்க வேண்டும். தெலுங்கானாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அனைத்து மட்டங்களிலும் அம்மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. பிஆர்எஸ் கட்சிக்கு எதிரான கோபம் காங்கிரசுக்கு ஆதரவாக திரும்பியது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில வளர்ச்சிக்கு என அம்மாநில அரசுகளிடம் கொள்கை இல்லை. சத்தீஸ்கரில் மக்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. புதிய திசையில் அம்மாநிலத்தை கொண்டு செல்லும் பணியில் மாநில அரசு பணியாற்றி வருகிறது. இன்று அம்மாநிலத்திற்கு துடிப்பான பொருளாதாரம் கிடைத்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அம்மாநில தலைவர்கள் அவர்களுக்குள் மோதிக் கொண்டனர் அல்லது மத்திய அரசுடன் மோதலில் ஈடுபட்டனர்.
இவ்விரு மாநிலங்களில் நவீன உள்கட்டமைப்பு பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் விவசாய வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நகரமயமாக்கல் என்பது தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் 5-7 நகரங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். ஹைதராபாத்தை சர்வதேச நகரமாக வளர்ச்சி பெற வேண்டும். அது வெறும் தலைநகர் மட்டுமல்ல. அதற்கு சர்வதேச அளவில் ஒரு பெயர் உள்ளது. அதனை பாதுகாக்க வேண்டும்.
சமூக நீதி முக்கியம் என்பது எனது நம்பிக்கை மடிகா சமுதாய மக்கள் நீண்ட காலம் துன்புறுத்தப்பட்டனர். அவர்களுடன் நான் துணை நிற்பேன் என வெளிப்படையாக கூறினேன். மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்க பணியாற்றுவேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.