ஆந்திராவின் ஸ்ரீசிட்டியில் ஓட்டுநர் இல்லாத ரயில் தயாரிப்பு பணி தொடக்கம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த வழித்தடங்களில், ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ரயில்கள் 3 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இதில், முதல்கட்டமாக, ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 26 மெட்ரோ ரயில்களை உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு நவ.17-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேலும் 10மெட்ரோ ரயில்களை தயாரித்துவழங்க அதே நிறுவனத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி மொத்தம் 36 மெட்ரோ ரயில்களை ரூ.1215.92 கோடி மதிப்பில் தயாரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வடிவமைப்பு ஆய்வுகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. இந்நிலையில், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணியை ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் நேற்று தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ்சதுர்வேதி (அமைப்புகள் மற்றும்இயக்கம்), தலைமை பொதுமேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (மெட்ரோ ரயில்), அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனில்குமார் சைனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த ரயில் வரும் ஆகஸ்ட்மாதம் பூந்தமல்லி பணிமனைக்கு வந்தடையும். மெட்ரோ ரயில் பெட்டிகளின் உற்பத்தியை முடித்த பிறகு, பெட்டிகளை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
பூந்தமல்லி மெட்ரோ பணிமனைக்கு முதல் மெட்ரோ ரயில்வருவதற்கு முன்பாக, உற்பத்திவளாகத்தில் தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பல்வேறு நிலையில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்படும்.
ஓட்டுநர் இல்லாத ரயிலில் ஆயிரம் பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படும். ரயிலில்குளிரூட்டப்பட்ட சூழல், பெண்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் பிரத்யேக இடங்கள் இடம்பெற்றிருக்கும். அவசரகால வெளியேற்ற கதவுகள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் தடைகளை கண்டறியும் கருவிகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்த ரயில்களில் இடம்பெற்றிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.