ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் பயணப்பாதை மாற்றம்: இஸ்ரோ அறிவிப்பு

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும்அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தியது. அதன்பின் விண்கலம் புவி சுற்றுப்பாதையில் இருந்து செப்டம்பர் 19-ம் தேதி விடுவிக்கப்பட்டு சூரியனை நோக்கி செல்லும் வகையில் அதன் செயல்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடர்ந்து 28 நாட்களில் விண்கலம் 9.2 லட்சம் கி.மீ தொலைவு பயணித்து, முழுமையாக புவியின் ஈர்ப்பு விசை மண்டலத்தை கடந்து எல்-1 புள்ளியை நோக்கி செல்கிறது.  இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: சூரிய ஆய்வுக்காகஅனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம்கடந்த 37 நாள்களாக எல்-1 புள்ளியை நோக்கி சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அவற்றின் இயக்க செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.

இதற்கிடையே திட்டமிட்ட எல்-1புள்ளியை சரியாக சென்றடைய ஏதுவாகஅக்டோபர் 6-ம் தேதி விண்கலத்தில் உள்ள இயந்திரங்கள் 16 விநாடிகள் இயக்கப்பட்டு அதன் பயணப் பாதையில் சிறிய மாற்றங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், விண்கலத்தில் உள்ள காந்தமானி கருவி சில நாட்களுக்கு பின்னர்இயக்கப்பட்டு அது சரியான திசையில்செல்கிறதா என்பதும் உறுதிசெய்யப்படும்.

இதையடுத்து புவியில் இருந்து 15லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி விண்கலம் சென்று கொண்டிருக்கிறது. எல்-1 புள்ளி அருகே சென்றதும் விண்கலம் அதை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் (Halo Orbit) நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்தபடியே எல்-1 பகுதியை மையமாக கொண்ட சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு சூரியனின் கரோனா மற்றும் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை ஆதித்யா ஆய்வுசெய்யும். இதற்காக அதில் 7 விதமானஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.