அரசியல் கட்சிகளுக்கு டாக்டர் அம்பேத்கர் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நினைவுக்கு வருவார். ஆம், ஏப்ரல் 14 அவரது பிறந்த நாள் அன்று ஒரு முறை; டிசம்பர் 6 அவரது நினைவு நாள் அன்று மறுமுறை. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க அன்பர்கள் தினந்தோறும் காலை ஷாகாக்களில் பாடும் ‘ ஏகாத்மதா ஸ்தோத்திரம் ‘ என்ற துதியின் 30வது செய்யுளில் ‘சுபாஷ … டக்கரோ பீம ராவ் …’ என அம்பேத்கருக்கு சிறப்பான இடம் அளிக்கிறார்கள். நம் நாட்டின் மேன்மைக்காக வாழ்வை அர்ப்பணித்த மகான்கள், -மாதரசிகளை நினைவுபடுத்தும் துதி கீதம் அது.
டாக்டர் அம்பேத்கருக்கு சங்கத்துடன் நேரடியான தொடர்பு 1939ல் புணேவில் நடைபெற்ற சங்க முகாமிற்கு தற்செயலாக சென்ற போது ஏற்பட்டது. முகாமில் 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடையில் இருந்தனர். முகாமின் பொறுப்பாளரிடம் அம்பேத்கர், “பங்கு கொள்பவர்களில் எத்தனை பேர் முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி போன்ற விவரங்களைத் தெரிவிக்க இயலுமா?” என்று தெரிந்து கொள்ள விரும்ப, பொறுப்பாளர் சொன்னார்: “முகாம் பதிவுப் படிவத்தில் அப்படி ஒரு கேள்வியே கிடையாதே ஐயா, என்னால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல இயலாது. விரும்பினால் தாங்களே அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். நாங்கள் மறுப்பு சொல்லப் போவதில்லை.’’ இது அவருக்கு முதல் ஆச்சரியம்.
அடுத்து, முகாமில் கலந்து கொண்டவர்கள் பலரை விசாரித்தபோதும், தன் பெயர், ஊரைச் சொல்லி விட்டு ‘எத்தனை ஆண்டாக ஸ்வயம்சேவக்’ என்ற ஒன்றை மட்டும் தங்கள் அடையாளமாகச் சொன்னார்கள். இது இரண்டாவது ஆச்சரியம். அவருக்கு முற்றிலும்ஐயம் நீங்கியது, மதிய உணவின் போதுதான் ஆம், அம்பேத்கருடன் டாக்டர்ஜி
யும் ஸ்வயம்சேவகர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் உட்கார்ந்து உணவருந்தினார்கள். அதேபோல பரிமாறியவர்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பெல்லாம் நடத்தவே முடியாது. இது அம்பேத்கரை மிகவும் கவர்ந்தது.
இங்கே, ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். சுதந்திர தினம், ஒரு தலைவர் பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களில் நடக்கும் ‘சமபந்தி போஜனம்’ போன்ற ஒன்றல்ல அது. சங்கத்தில் அன்றாடம் நடைபெறும் மிகவும் இயல்பான ஒன்று.
ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது அகில பாரத தலைவர் ஸ்ரீ குருஜி (எம்.எஸ்.கோல்வல்கர்) 1949 செப்டம்பரில் டெல்லிக்குச் சென்று ஆர்.எஸ்.எஸ் மீதான அநியாய தடையை நீக்குவதற்கு டாக்டர் அம்பேத்கர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
1953 ஜூனில் மூத்த ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர்களான மோரோபந்த் பிங்களே, பாளாசாகேப் ஸாத்தே ஆகியோர் அம்பேத்கரை மகாராஷ்டிராவின் ஒளரங்காபாத்தில் சந்தித்தனர். அப்பொழுதும் டாக்டர் அம்பேத்கர் ஹிந்து ஒருங்கிணைப்புப் பணி புரிந்து வரும் சங்கத்தின் மீது தனக்குள்ள நன்மதிப்பை வெளிப்படுத்தினார். சமுதாய ஒற்றுமை எல்லா முன்னேற்றத்திற்கும் அடிப்படை என்று அவர் நம்பினார். அறத்தின் அடிப்படையில் மட்டுமே சமூக சூழலில் மாற்றம் சாத்தியமாகும் என்று அவர் நம்பினார்.
சிகரம் வைத்ததைப் போன்ற ஒரு சம்பவம் குறிப்பிட வேண்டுமென்றால் அது சங்கத்தின் மூத்த பிரச்சாரக் – பி.எம்.எஸ் போன்ற உலகின் மிகப் பெரிய தொழிலாளர் அமைப்பை பின்னாளில் துவக்கிய – தத்தோபந்த் டெங்கடிஜி 1952 முதல் 1956 வரை டாக்டர் அம்பேத்கருக்கு இறுதிக் காலத்தில் செயலாளராக பணியாற்றியது தான். இருவருக்கும் ஆத்மார்த்தமான அறிவார்ந்த நட்பு இருந்தது. டெங்கடிஜி அந்த இனிய நாட்களை தன் உரையிலும் எழுத்துக்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அணுகுமுறை, நடைமுறை, செயல்முறைகள் வேறுபட்டாலும், சாதி பேதமற்ற வலிமையான பாரதம் அமைய வேண்டும் என்ற இலக்கில் சங்கத்துடன் அவருக்கு முழு உடன்பாடு உண்டு என்று கூறி ‘டாக்டர் அம்பேத்கர் அப்பழுக்கற்ற ஆகச் சிறந்த தேசபக்தர் ‘ என்று டெங்கடிஜி உறுதியாகச் சொல்கிறார் ஒரு கட்டுரையில்.
“அரசியலையும் தாண்டி சமூக, பொருளாதார அம்சங்களுக்கு முக்கியத்துவம் உண்டு; அறத்தின் அடிப்படையில் செயல் முறைகள் அமைய வேண்டும்” என்பதில் சங்கத்தினரும் டாக்டர் அம்பேத்கரும் ஒருமித்த சிந்தனை உள்ளவர்கள். டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புள்ள 5 முக்கியமான தலங்களிலும் சங்கத்தின் வழிகாட்டுதலில் உருவான ஸ்வயம்சேவகர்கள் ஆட்சிதான் நினைவு மண்டபம் அமைத்தது என்பதை வி.சி.கவின் திருமாவளவன் போன்றோர் கூட ஒப்புக்கொள்ளவேண்டியுள்ளது.
அரசியல் சாஸன பிரிவு 370 நீக்கம், இடதுசாரிகளை வழிக்குக் கொண்டு வந்தது, பசு பாதுகாப்பில் கவனம், சமஸ்கிருதத்திற்கு கெளரவம், பொது சிவில் சட்டம் கொண்டு வர முன்னெடுப்பு என டாக்டர் அம்பேத்கர் இதயத்திற்கு இனிய செயல் திட்டங்களை நிறைவேற்றுவது சங்கத்தினர்.
மகாராஷ்டிரத்தில் சம்பாஜிநகர் (முந்தைய மராத்வாடா) பல்கலைக்கழகத்திற்கு பாபாசாகேப் அம்பேத்கர் பெயர் சூட்ட 1994ல் தீர்மானிக்கப்பட்டது. அதை எதிர்த்து சில அரசியல் கட்சிகளும் பிரமுகர்களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்மத்துடன் பரப்புரை செய்ததில், ஊருக்குள் கொந்தளிப்பு பரவ ஆரம்பித்தது. பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டுவதை பகிரங்கமாக, மனப்பூர்வமாக ஆதரித்த ஆர்.எஸ்.எஸ் களம் இறங்கி கொந்தளிப்பை தணிப்பதிலும் வெற்றி பெற்றது.
சங்க ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவார், டாக்டர் அம்பேத்கர் ஆகிய இருவர் பிறந்த தினமும் 1983 ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று சங்க
மித்தது; அதையொட்டி, சமுதாயத்தில் ஜாதியை தாண்டி சுமுக சூழல் உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அன்றைய தினம் சாமாஜிக் சமரசதா இயக்கம் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க நாட்களில் காலா ராம் ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக அம்பேத்கர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சத்யாகிரகம் செய்தார்கள். அப்போது அம்பேத்கர் அவமதிக்கப்பட்டார், தாக்கப்பட்டார். பின்னாளில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேர்ந்த அந்த அவமானத்தை துடைத்தது ஆர்.எஸ்.எஸ் என்பது பரவலாக சொல்லப்பட வேண்டிய வரலாறு.
கட்டுரையாளர் :
செய்தி விமர்சகர்