அஸ்தமனமாகட்டும் ஆணவக் கொலைகள்
தமிழகத்தில் தர்மபுரி துவங்கி உடுமலைப்பேட்டை வரை ஆணவக் கொலை, கௌரவக் கொலை என்றெல்லாம் புதுப்புது பெயர்களில் கொலைகள் அரங்கேறி வருகின்றன. காதல் செய்து கலப்புத் திருமணம் செய்து கொண்டான் என்ற ஒரே காரணத்திற்காக பொறியியல் மாணவன் சங்கர் உடுமலையில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டான். கொலை செய்த பிறகு கொலையாளிகள் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல் சாவகாசமாக தப்பிச் செல்கிறார்கள். காரணங்கள் எதுவாக இருந்தாலும் இத்தகைய படுகொலைகள் காட்டுமிராண்டித் தனமானவை. கொலையாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
50 ஆண்டுக்கால திராவிட கட்சிகளின் ஆட்சியின் லட்சணம் தான் இந்த ஜாதி மோதல்கள். சினிமா, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் போன்றவை இன்றைய சமுதாயச் சீரழிவுகளுக்குக் காரணங்களாக இருக்கின்றன. அம்மாமார்கள் பொழுதெல்லாம் சீரியல்களில் மூழ்கிக் கிடப்பதும் காரணம். படிக்கின்ற வயதில் காதல், கீதல் என்று திசைமாறாமல் இருக்க இளம் பெண்களை சரியானபடி வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.
சில ஜாதித் தலைவர்கள் தங்கள் இளைஞர்களிடம் மற்றைய ஜாதிப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய் என்று உசுப்பி விடுவதும் கலவரங்களுக்குக் காரணம். இவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். சில தலித் தலைவர்கள் அந்த சமூகத்தை உயர்த்துவதற்கு பதிலாக அவர்களை வெறும் ஓட்டு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்தி வருவதும் குழப்பங்களுக்குக் காரணம். தீண்டாமை எதிர்ப்பு மாநாடு என நடத்தி, கம்யூனிஸ்டுகள் மேலும் மேலும் ஜாதி துவேஷங்களை வளர்த்து வருகிறார்கள். மேலும், தலித் சகோதரர்களை ஹிந்து சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தவும் சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? ‘ஜாதி’ என்ற ஒரு சிறிய கோட்டிற்குப் பக்கத்தில் ‘ஹிந்து’ என்ற ஒரு பெரிய கோட்டைப் போடுவதுதான். ஹிந்துக்கள் அனைவரும் ஒரு குடும்பம் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். தீண்டாமை படிப்படியாக ஒழிக்கப்பட வேண்டும். இதற்காகத்தானே கடந்த 90 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். பணியாற்றி வருகிறது!