அவதூறு வழக்கில் இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், மும்பை முலுந்த் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி எனது கவனத்தை ஈர்த்தது. இந்த செய்தி முழு உண்மையையும் தெரிவிக்கும் வகையில் இல்லை. இது அரைகுறையான தகவலாகத் தோன்றியது. இதையடுத்து இதுதொடர்பான பின்னணியை உன்னிப்பாக அலசினேன்.
வழக்கறிஞர் சந்தோஷ் ராம சொரூப் துபே, பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மீது எத்தகைய சூழ்நிலையில் அவதூறு வழக்கு தொடுத்தார் என்பதை முதலில் கவனிப்போம். பாஜகவின் தத்துவ வழிகாட்டியாக கருதப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தை தலிபான் அமைப்புடன் ஜாவேத் அக்தர் ஒப்பிட்டார். தலிபான் அமைப்பு காட்டுமிராண்டித்தனமானது. வரைமுறையின்றி அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளை இழிவு செய்யும் வகையில் ஜாவேத் அக்தரின் வார்த்தைகள் அமைந்திருந்தன. தலிபான் அமைப்புடன் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தை ஒப்பிட்டதால் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஹிந்து அமைப்புகள் ஜாவேத் அக்தருக்கு எதிராக திரண்டெழுந்து போராடினர். 397, 399 ஆகிய பிரிவுகளின்கீழ் ஜாவேத் அக்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜாவேத் அக்தருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
வழக்கறிஞர் சந்தோஷ் ராம சொரூப் துபே, பாடலாசிரியர் ஜாவேத் அக்தருக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை வாபஸ் பெற்றது ஏன் என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. மத்தியஸ்தம் வாயிலாக இப்பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மண்டியிட்ட ஜாவேத் அக்தர்
ஜாவேத் அக்தர் நிரபராதி என விடுவிக்கப்படவில்லை. மத்தியஸ்தம் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் வழக்கை சந்தோஷ் ராம சொரூப் துபே வாபஸ் பெற்றுள்ளார் என்பதே உண்மை.
மும்பை முலுந்த் நீதிமன்றம் கூறியது என்ன என்பதை முழுமையாக இங்கு தெரிவிக்க வேண்டியது அவசியமல்ல. அதற்கு அவகாசமும் இல்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மத்தியஸ்தத்தில் ஹிந்து மத அமைப்புகளின் நடவடிக்கைகளை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணமோ அல்லது இந்த அமைப்புகளில் அங்கம் வகிப்போரின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கமோ எனக்கு துளியும் கிடையாது என்பதை ஜாவேத் அக்தர் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
விளம்பரத்துக்காக உளரல்
அதுமட்டுமல்லாமல் முதுமை காரணமாக தன்னால் இயல்பாக இயங்க முடியவில்லை. முதுமை ஏறத்தாழ தன்னை முடக்கி விட்டது. உடல்நலக்குறைவால் இயல்பான நடவடிக்கைகளை கவனிப்பதில் கூட சிரமம் ஏற்படுகிறது என்றெல்லாம் ஜாவேத் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் என்ன நடைபெறுகிறது, அங்கு எத்தகைய கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன என்று தான் குறிப்பிட்டேனே தவிர நம் நாட்டில் இத்தகைய கொடூரங்கள் நடைபெறுகின்றன என்றோ அல்லது இதற்கு ஏதேனும் ஹிந்துத்துவ அமைப்புதான் காரணம் என்றோ குறிப்பிடவில்லை என்றும் ஜாவேத் அக்தர் குறிப்பிட்டிருந்தார். அவரது விளக்கத்தில் பல முரண்பாடுகள் உள்ளன. சில பிழைகளும் உள்ளன. எனினும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று ஜாவேத் அக்தர் தெரிவித்து விட்டதால் இதை பெரிதுபடுத்த விரும்பாமல் பெருந்தன்மையான முறையில் அவதூறு வழக்கை சந்தோஷ் ராம சொரூப் துபே வாபஸ் பெற்றுவிட்டார்.
சமரசம்
ஜாவேத் அக்தருக்கு எதிராக வழக்கு தொடுத்து அதை வாபஸ் பெற்ற வழக்கறிஞர் சந்தோஷ் ராம சொரூப் துபே முதிர்ச்சி பெற்றவர் என்று கூற முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ் மீது ஜாவேத் அக்தர் கூறிய குற்றச்சாட்டு ஒன்றும் புதிதல்ல. இது அபத்தமானது என்பது ஏற்கெனவே பலமுறை விளக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறு விமர்சிக்க மாட்டேன் என்று நீதிமன்றத்தில் ஜாவேத் அக்தர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார். ஆனால், ஜாவேத் அக்தர் மன்னிப்பு கேட்கவில்லை. தவறான வார்த்தைகளை பிரயோகித்ததற்காக அவர் பகீரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். வார்த்தைகளை முதலீடாகப் பயன்படுத்தி செல்வத்தை திரட்டியவர்தான் ஜாவேத் அக்தர். அவசரப்பட்டு மத்தியஸ்தத்துக்கு வழக்கறிஞர் சந்தோஷ் ராம சொரூப் துபே ஒப்புக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதுதான் எனது கருத்து.
சம்பந்தப்பட்ட நபர் பகீரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். அல்லது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் இரண்டு அம்சங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ராகுல்காந்தி, திக்விஜய் சிங், தஸ்லிம் ரகுமானி, ஜான் தயாள் உள்ளிட்ட நபர்கள் மீது மும்பை நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாவேத் அக்தர் வழக்கிலிருந்து, இந்த வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி