தைப் பொங்கல் முதல் ஆனி வரையிலான உத்தராயணம் எனப்படும் 6 மாதங்களில் அமைதியான வழிபாடுகள் நடைபெறுகின்றன. அந்த ஆறு மாதங்கள் மற்றவர்கள் விழித்திருக்கும் 1 நாளின் பகல் பொழுது. ஆனால் ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயண காலம் தேவர்கள் உறங்கும் இறைபொழுது.
இந்த ஆறு மாதங்கள் மக்கள் தேவர்களின் இறையருளை பெற ஒளி, ஒலி என வழிபாடுகளை ஆர்ப்பாட்டமாக செய்து வருகிற வழக்கத்தை தான் ஆடி அழைத்து வரும் என்ற வழக்கிற்கு காரணம். ஆடி மாதத்தில் மட்டுமே பல்வேறு வைபவங்கள் குவிந்து கிடக்கின்றன. அதனைத் தொடர்ந்து பிள்ளையார் சதுர்த்தி, வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, தசரா, தீபாவளி, திருக்கார்த்திகை, போகி பண்டிகை என வரிசை கட்டி வரும் பண்டிகைகளும் விழாக்களும் தான் எத்தனை எத்தனை? அத்தனையும் தனித்துவம் மிக்கதல்லவா?
ஆடியில் தனிமனிதருக்கும் சமுதாயத்திற்கும் முக்கியத்துவம் தரும் விசேஷ தினங்கள் தான் எவ்வளவு?
ஆடிப்பூரம் : திருஆடிப்பூரத்து * திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழிய என ஸ்ரீரங்க பெருமாளின் பிரிய பக்தையாக மட்டுமல்ல, இன்றுவரை நம்மில் கோடானுகோடி மக்களின் மனதிலும் நிறைந்தவளான ஆண்டாளின் திரு அவதார நாள்.
ஆடிக் கிருத்திகை: கிருத்திகை மாதந்தோறும் வந்தாலும் ஆடித் கிருத்திகை குன்றுதோறுமுள்ள குமரனை தேடி உலகெங்கிலுமுள்ள பக்தர்கள் பரவசத்துடன் காவடி எடுத்து வழிபடும் விசேஷமான நாள்.
ஆடிப்பெருக்கு: ஆடி 18ம் நாள் காவிரி பெருக்கெடுத்து வரும் பொன்னான நாள். புனிதமான நதிநீர் பெருக்குடன் மக்களின் மங்கல வாழ்வு பிணைந்து நிற்பதை உணர்த்தும். தாலி பெருக்கி, நதியில் பிரவாகிக்கும் கங்கையை பூச்சொரிந்து தீபமேற்றி வழிபடுவர் நம் மாதரசிகள். உலகில் எந்த மூலையில் வசித்தாலும் அங்குள்ள நீர் வளத்தை, நம் கங்கையை பூஜித்து மகிழும் பாரம்பரியம் தொடர்கிறது.
ஆடி அமாவாசை : முன்னோர்களை போற்றி வழிபட்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு அவர்களின் ஆசிகளை பெற்று வலிமை சேர்க்கும் நம் கலாச்சாரத்தின் தொடர்ச்சி/.
வரலட்சுமி விரதம்: செல்வ வளம், மாங்கல்ய பலம் வேண்டி பெண்கள் சிரத்தையுடன் மேற்கொள்ளும் விரதம்.
அம்மன் வழிபாடுகள்
- பொங்கலிடுதல் 2. கூழ் வார்த்தல் 3. முளைப்பாரி விடுதல் 4. தீமிதி திருவிழா என நாடு முழுதும் சின்னஞ்சிறு தெருவிலுள்ள கோயில்களிலிருந்து பிரம்மாண்டமான தலங்களிலும் ஆடி திருவிழாக்களில் அற்புதமாக ஜொலிப்பது ஊர் மட்டுமல்ல, மக்களின் உணர்வுகளும்தான்.
குடும்பங்கள் கூடுகின்றன; உறவுகள் உறுதியாகின்றன; ஊரும் ஒன்றுபடுகிறது. எல்லோரையும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையாக நினைக்க வைக்கும் அம்பிகை வழிபாடு; அவரவர் சக்திக்கு வைக்கும் பொங்கல் மணக்கும். வார்க்கும் கூழ் முருங்கைக் கீரை கூட்டுடன் ஊரார்க்கு படைக்கும் ஒரு சத்துணவு விழா. விரதமிருந்து நேர்த்திக்கடன் தீர்க்கும் தீமிதி திருவிழா தரும் நிம்மதிக்கு ஈடேது? ஆம். ஆடி அழைத்து தான் வருகிறது. பண்டிகைகள் விழாக்களை அல்ல, நம் பாரம்பரியத்தை, மனிதனை தெய்வநிலைக்கு உயர்த்தும் அதி அற்புதமான அனுபவங்களையும்தான்.