சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வசமய மாநாட்டிற்குச் செல்வதற்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் சென்னையைச் சேர்ந்த அளசிங்கப் பெருமாள் என்பவர். சுவாமிஜியின் பயணச் செலவுகளுக்காக வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி சுவாஜியை அனுப்பி வைத்தார்.
மாநாடு நடைபெறுவதற்கு வெகு நாட்கள் முன்பே சுவாமிஜி அமெரிக்கா சென்றுவிட்டார். சுவாமிஜியை அமெரிக்காவில் யாருக்கும் தெரியாது. கொண்டு வந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது. மாநாட்டிற்கு இன்னும் ஒரு மாத காலம் இருந்தது. சுவாமிஜியின் வித்தியாசமான தலைப்பாகை, காவி உடை இவற்றைப் பார்த்த சிலர் கிண்டலும், கேலியும் செய்தனர். சில நேரங்களில், அவர் மீது கல்வீசி தாக்க முற்பட்டனர். தனக்கு, செலவுக்கு உடனடியாகப் பணம் தேவை என்று சுவாமிஜி அளசிங்கருக்குத் தந்தி அனுப்பினார்.
அளசிங்கர் சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அப்போது அவரது மாதச் சம்பளமே 80 ரூபாய் தான். சுவாமிஜியின் கஷ்டத்தை தனது மனைவி ரங்கம்மாளிடம் சொல்லி, அவரது நகைகளைத் தர முடியுமா என்று வேண்டினார். அவரும் தனது நகைகளைக் கழற்றிச் சந்தோஷமாகக் கொடுத்தார். அந்தக் காலத்தில் தங்கத்திற்கு அவ்வளவு விலை இல்லை. நகைகளைக் கொண்டுபோய் விற்று அதில் கிடைத்த 1,100 ரூபாயை சுவாமிஜிக்கு தந்தி மணியார்டர் மூலம் அனுப்பி வைத்தார். சிகாகோ மாநாட்டிற்குப் பிறகு சுவாமிஜியின் பொருளாதாரக் கஷ்டம் தீர்ந்துவிட்டது.
மிகப் பிரம்மாண்டமான கோபுரங்களும், அதன்மீதுள்ள கலசங்களும் வெளி உலகத்திற்கு நன்றாகத் தெரியும். ஆனால் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் யாருக்கும் தெரியாது.
‘சுவாமி விவேகானந்தர்’ என்ற கோபுரத்தின் அஸ்திவாரக் கல்லாக இருந்தவர் அளசிங்கப் பெருமாள் என்றால் மிகையாகாது.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்