இந்த குழுவினரின் புன்னகைக்குக் காரணம் என்ன தெரியுமா-? அல்சைமர் நோயிலிருந்து விடுபட வழியே இல்லை என்று சொன்ன மருத்துவ உலகிற்கு பாரதிய யோகா முறையில் தீர்வு கண்டவர்கள்தான் இந்தக் குழுவினர்.
சுதேசி தீர்வு
அல்சைமரினால் பாதிக்கப்பட்ட பெரியவர் கள் தம் வாழ்க்கையை பிறரை நம்பியே நடத்த வேண்டியிருக்கிறது. அல்சைமர் நோயின் தாக்கம் ஒப்பீட்டளவில் அதிகமாக அமெரிக்கர்களிடமும் ஆப்பிரிக்க மக்களிடமும் காணப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரும் நம் நாட்டின் முன்னாள் ராணுவ அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸும் இந்நோயினால் தாக்கப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்கள்.
மத்திய அரசின் அறிவியல் – தொழில் நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவி – மேற்பார்வையில் நடைபெறும் அமைப்பான , நேஷனல் ப்ரைன் ரிசர்ச் சென்டர் (NBRC), ஹரியானா மானேசரில் (குருகிராம்) உள்ள ஆய்வு மையம் சார்ந்த பல் துறை விற்பன்னர்கள் குழு பெருந் தரவு அலசல் (Big Data), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பொறி கற்றல் (Machine Learning) மூலமாக அல்சைமர் நோயைக் குணப்படுத்தலாம் என்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
டாக்டர் ப்ராவத், டாக்டர்கள் தீபிகா, அங்கிதா, த்ருப்தி போன்றோர் இக்குழுவில் இடம் பெற்றார்கள்.
வையகமே பயன் பெறட்டுமே
நம் நாட்டு மருத்துவ வல்லுனர்களின் ஆய்வின் பயனும் பாரத நாட்டில் பன்னெடுங்காலமாக கடைபிடிக்கப்படும் எளிய வழிமுறைகளும் உலகத்தவர் அனைவருக்கும் சென்று அடைந்தால் நமக்கு பெருமைதானே!!
இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாய் சராசரி இறப்பு விகிதம் குறைந்து 60 வயது கடந்து வாழ்வோரின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. அதே வேளையில் மூத்த குடிமக்களின் ஆரோக்கியம் தொடர்பான சவால்களும் அதிகரித்திருப்பதாகத்தான் தோன்றுகின்றன. அத்தகைய சவால்களுள் ஒன்று தான் அல்சைமர் நோய் (Alzheimer disease). மூத்த குடிமக்களில் குறிப்பாக 65 வயதை கடந்தவர்களுக்கு இந்த நோய் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று அறியப்படுகிறது. இந்நோய் மூளை- நரம்பியல் சம்பந்தமான, நரம்பியல் சிதைவுகளால் – திசுக்களின் அழிவினால் ஏற்படுகிறது.
இந்த நோய் பற்றி ஆராய்ந்து 1906ல் மருத்துவ உலகத்தின் கவனத்திற்கு கொணர்ந்தவர் அலோஷியஸ் அல்சைமர் என்ற ஜெர்மானிய மருத்துவர்.
அறிகுறிகள்
- நினைவாற்றல் குறைதல்- ஞாபக மறதி
- அதிலும் குறிப்பாக சமீபத்திய நிகழ்வுகளை
- நினைவில் கொள்ள முடியாமை
- புரிந்து கொள்ளும் அறிவுத் திறன் குறைதல்
- திட்டமுடியாமை
- சொன்னதையே திரும்ப திரும்ப கூறுதல்
- தசைகள் இறுகிப் போதல்
காரணங்கள்
வயது சம்பந்தமானதாக இருந்தாலும், கீழ்க்கண்ட காரணங்களால் அல்சைமர்
பாதிப்பு அதிகமாவது தூண்டப்படுகிறது:
- மன அழுத்தம் – ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய்
- மிகையான உடல் பருமன் – ஊளை சதை (Obesity)
- தவறான உணவுப் பழக்கங்கள்
- புகை பிடித்தல்- மது பழக்கம்
- சிறு வயதில் மண்டையில் பட்ட அடி
உத்திகள்
பாதிப்பைக் குறைக்கவும் தள்ளிப் போடவும்
சில எளிய வாழ்வியல் மாற்றங்கள்:
- யோகா / தியானப்பயிற்சி
- சமூக சேவையில் ஈடுபடுதல்
- செல்லப் பிராணி வளர்ப்பு
- ஓவியம், தோட்டப் பணி, சுடோகு, குறுக்கெழுத்து கட்டங்கள் போன்றவற்றில் நேரம் செலவிடுதல்
- மெல்லிய இனிமையான இசை கேட்டல்
- பிடித்த ஸ்லோகங்கள்- சொல்லிப் பார்த்தல்