அறமற்ற அறநிலையத்துறை

கழுதை தேய்ந்து கட்டெறும்பானதை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் கட்டெறும்பு வளர்ந்து கழுதை ஆன கதைதான் தமிழக அறநிலையத்துறையின் கதை.

கோயில்கள், திருமடங்கள், கட்டளைகள் நிர்வாகத்தினை ஒழுங்குபடுத்த வந்தச் சட்டம் அறக்கட்டளைகள் சட்டம். ஆனால் ஒழுங்குபடுத்த வந்தவர்கள், கட்டுப்படுத்தினர். பிறகு உத்தரவு போட்டனர். இறைவனுக்கே என்ன நைவேத்யம், எவ்வளவு நைவேத்யம், எந்தத் தேதியில் கும்பாபிஷேகம், யார் பெயரில் அன்னதானம், என்றெல்லாம் தீர்மானித்து செயல்படுத்தவும் தொடங்கினர். அன்னதானம், திருமணங்கள், கும்பாபிஷேகங்கள் என அனைத்திலும் ஊழல்கள்.

கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப் படவில்லை. திருப்பணி பெயரில் கொள்ளை.  கோயில் பணம் மடை மாற்றம். 1000 கோயில்களில் திருப்பணி என கூறி, அறங்காவலர்கள் இல்லாத 20 கோயில்களில் இருந்து ரூ.10 கோடி எடுக்கின்றனர்.

இது சட்ட விரோதம் என்று பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு அறநிலையத்துறை, ‘ஆமாம், கோயில் கார் அமைச்சரிடம் உள்ளது. கோயில் பணத்தில் சம்பளம் வாங்கும் டிரைவர்கள், டைப்பிஸ்ட் 13 பேர் அறநிலையத்துறையில் உள்ளனர். மீட்டிங்கின்போது கோயில் பணத்தில் தான் அவர்களுக்கு உணவு, காபி, டி எல்லாம். அதற்கு என்ன இப்பொழுது என்ற ரீதியில் பதில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
உயர்நீதி மன்றம் கோயிலில் நடக்கும் சட்ட மீறல்கள், ஊழல்களை நீக்கச் சாட்டையைச் சுழற்றத் தொடங்கியுள்ளது. நாமும் அடுத்த தேர்தலில், இந்துக் கோயில்களை விட்டு அரசு வெளியேற, கோயில் சொத்துக்கள் பாதுகாக்க ஆதரவளிக்கும் கட்சிக்கே எங்கள் வாக்கு என சொல்வோம். தர்மத்தை காப்போம்.