தமிழக அரசு துறைகள் அறிமுகப்படுத்தி உள்ள, ‘மொபைல் ஆப்ஸ்’களில், தமிழக அரசின் கோபுரம் சின்னம் இடம் பெறாததற்கு, ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஹிந்து சமய அறநிலைய துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், மொபைல் ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் லோகோவில், தமிழக அரசின் கோபுரம் சின்னம் இடம் பெறவில்லை.
இது, சர்ச்சையை ஏற்படுத்தியதும், போக்குவரத்து கழக மொபைல் ஆப்ஸ் லோகோ, கோபுரம் சின்னத்துடன் மாற்றி அமைக்கப்பட்டது. அதே நேரத்தில், கோபுரம் சின்னம் இடம் பெறாததற்கு, ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பாரத் இந்து முன்னணி மாநில தலைவர் பிரபு: ஹிந்து மதத்தின் அடையாளங்களை காணாமல் போகச் செய்யும், தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. ஹிந்து சமய அறநிலைய துறை மொபைல் ஆப்ஸ் முதல் பக்கத்தில், கோபுரம் சின்னம் மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல, போக்குவரத்து துறை மொபைல் ஆப்சிலும் கோபுரம் சின்னம் மாற்றப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை சென்னை மாகாணமாக இருந்தன. அதன் முதல்வராக இருந்த ஓமந்துார் ராமசாமி ரெட்டியார், கோபுரம் சின்னத்தை, இந்திய அரசுக்கு அனுப்பி, தமிழக அரசு சின்னமாக, 1949ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் ஹிந்து மத அடையாளமாக, தமிழக அரசின் கோபுரம் சின்னம் திகழ்வதை மாற்றுவது புரட்சி என நினைப்பது, ஹிந்துக்கள் மனதில் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் செயலாக அமைகிறது. இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் மொபைல் ஆப்ஸ் லோகோ, தமிழக அரசின் முத்திரையான, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் கோபுரம் சின்னம் இல்லாமல், ‘வாய்மையே வெல்லும்’ என்ற சிங்க முத்திரையுடன் வெளியாகி இருக்கிறது.
ஹிந்து சமய அறநிலைய துறைக்கு, பிற மத வழிபாட்டு தல கோபுரம் போன்ற லோகோவை உருவாக்கி இருக்கின்றனர். திராவிட மாடல் அரசு என்று சொல்லக்கூடிய தமிழக அரசு, மெல்ல மெல்ல ஆண்டாள் கோவில் கோபுரத்தின் அடையாளத்தை அழித்து வருகிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. ஹிந்து சமய அறநிலைய துறையை, தமிழர் சமய அறநிலைய துறை என்று மாற்ற வேண்டும். தமிழக அரசின் கோபுரம் சின்னத்தை மாற்ற வேண்டும் என, தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் கோரிக்கை வைக்கும் சூழலில், ஹிந்து மத அடையாள அழிப்பில், அரசு செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த வேலையை அரசு செய்ய வேண்டாம். உடனடியாக அரசு துறை மொபைல் ஆப்ஸ் லோகோவில், தமிழக அரசின் சின்னத்தை வைக்க வேண்டும். லோகோவை மாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.