ஒருமுறை பாபா ஆப்தே தீனதயாள் உபாத்யாயாவிடம் டாக்டர் ஹெட்கேவர் பற்றிய புத்தகத்தை ஹிந்தியில் மொழி பெயர்க்க கேட்டுக் கொண்டார். சரி என புத்தகத்தை வாங்கிய தீனதயாள் மூன்றே மாதங்களில் ஆப்தேவிடம் நூலின் மொழிபெயர்ப்பை கொடுத்துவிட்டார்.
இவ்வளவு வேலைகளுக்கு மத்தியில், குறுகிய காலத்தில் எப்படி முடித்தீர்கள் என வியந்தார் ஆப்தே. அதற்கு “எங்கே உந்து சக்தி உள்ளதோ அங்கே ஆக்கும் சக்தியும் உள்ளது. ஒருவேலையை முடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டால் முடியாத காரியங்களும் உலகில் உண்டோ?” என கேட்டார் பண்டிட் தீனதயாள்.
‘என்ன மங்கள் இன்று என்ன சேதி’ என சமையல் காரரை அன்புடன் கேட்பார் தீனதயாள். இதில் சந்தோஷப்படும் மங்கள் ‘நீங்கள் சங்கத்தில் முதன்மை நபர், ஆனால் எளிமையானவர், என்னை நீங்கள் சாதாரணமானவனாக கருதியதில்லை’ என்றார். அதற்கு, ‘நீங்கள் சாதராணமானவர் என்றால் நானும் சாதாரணமானவன்தான். இதில் வேறுபாடு எங்கிருந்து வரும் என அன்பாக பேசினார் உபாத்தியாயா.
ஒருமுறை தீனதயாள் லண்டனில் ஜனசங்கம் பற்றி இரண்டு மணி நேரம் உரையாற்றினார். கூட்டம் முடிந்தும் பத்திரிகையாளர்கள் உட்பட யாரும் வெளியேறவில்லை. அனைவரும் அவருடன் பேச ஆவலுடன் இருந்தனர். இதை கண்ட நண்பர் நாராயண ஷர்மா,
‘உங்களின் பேச்சு இங்கே ஒரு ஷாகாவை ஆரம்பித்துவிடும் போலிருக்கிறது’ என்று கிசுகிசுத்தார். மறுநாள் மான்செஸ்டர் கார்டியன் நாளிதழ் ‘ஆராயப்பட வேண்டிய மனிதர்’ என்ற தலைப்பில் இவரை குறித்து செய்தியை வெளியிட்டது.
ஜனசங்க தலைவர் தீனதயாள் உபாத்தியாயா பிறந்த நாள் இன்று.