வைசியன் ஒருவன் முன்னொரு காலத்தில் அன்றாட உணவுக்கே வழியில்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தான். அதே நேரம், பக்தி சிரத்தையுடன் அன்றாட வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தான். அவன் பக்தியை மெச்சிய பெரியோர், அவனிடம் ‘அட்சய திருதியை’யின் மகத்துவத்தைக் கூறினர். ஓர் அட்சய திருதியை நாளில் அந்த வைசியனும் பாத்திரத்தில் அன்னம் வைத்து ஜலம், கோதுமை, கரும்புச்சாறு, பால், தட்சிணை முதலானவற்றை ஏழை அந்தணர்களுக்குத் தானமாகக் கொடுத்தான். அவனது மனைவி வறுமையின் ரேகைகள் பளிச் எனத் தெரியும் வண்ணம் ஏழ்மை நிலை காரணமாக அவனது மனைவி தடுத்தும்கூட, அட்சய திருதியை நன்னாளை எந்த ஒரு குறையும் இல்லாது அனுசரித்தான். இத்தகைய நற்காரியங்கள் பலனாக, அந்த வைசியன் தனது மறுபிறவியில் குஷபதி சக்ரவர்த்தியாகப் பிறந்து புகழ் பெற்றான்.
அதேபோல, தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த வெறும் மூன்று பிடி அவலை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை, கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்நன்னாளில்தான். அட்சயா என்றால் எப்போதும் குறையாதது என்பது பொருள். இன்று அன்னபூரனிதேவி தோன்றிய நாளாகவும் கருதப்படுகிறது. இந்நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணியை ரதம் செய்வோர் தொடங்குவர். கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள் இன்று. யாகத்திற்கு உபயோகப்படுத்தும் பார்லி தோன்றிய நாளும் இன்று தான். பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து பக்தர்கள் தரிசிப்பதற்காக கோயில் நடை மீண்டும் திறக்கபடும் சுபதினமும் இன்று தான்.
ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் திருதியை நாளில்தான் இடம் பெற்று நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிடைக்கும். செல்வத்திற்கு அதிபதியான குபேரரே இன்னன் நாளில் விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமுமான லட்சுமியை வணங்குவார்.
இன்று தொடங்கப்பட்ட எந்தவொரு தொழிலும், காரியமும், முயற்சியும் தொடர்ச்சியாக பன்மடங்கு வளர்ந்து நன்மைகளைக் கொடுக்கும், அதனால்தான் ஒரு வியாபார அமைப்பைத் தொடங்குவது, பூமி, வாஸ்து பூஜை போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர். அட்சய திருதியை நாளில், அரிசி முதலிய தேவையான பொருட்கள் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிகக்குறுகிய காலத்தில் தீர்க்கும். நம்மால் வாங்க முடிந்த பொருட்களை இன்று வாங்கினால் அந்த பொருளானது அதிக நாட்கள் நீடித்து உழைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நன்னாளில் வீட்டிற்கு மகாலட்சுமி தாயை வரவேற்க செய்ய வேண்டிய சில விஷயங்களை செய்யும் பொழுது எளிதாக செல்வ வளத்தை பெற முடிகிறது. மகாலட்சுமி கல் உப்பில் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அக்ஷய திருதியை அன்று பிற பொருட்கள் வாங்க முடியாதவர்கள், கல் உப்பை மட்டுமாவது வாங்கி வைத்தால் கூட, வீட்டில் வறுமை இன்றி செல்வ நிலை உயரும்.
அட்சய திருதியை நாளில், குபேர லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. வர்த்தக ரீதியைப் பொறுத்தவரை, பெரும்பாலான நகைக்கடைகள் ‘லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட’ தங்க நாணயங்கள், அணிகலன்கள் மற்றும் புதிய நகை மாதிரிகளை இன்றைய சுபயோக சுபதின வியாபாரத்திற்காக இருப்பில் வைக்கின்றனர். .தயிர் சாதம் போன்ற சாத வகைகளை ஏழைகளுக்கு இன்று தருவது, பதினோரு தலைமுறைகளுக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க மட்டுமின்றி, பாப விமோசனத்திற்கும் வழிவகை செய்யும். ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தானம், உதவிகள் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன்களைத் தரவல்லவை.
முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை. காக்கும் கடவுளான திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான பரசுராமர் அவதரித்த திருநாள் இன்று. பகீரதன் தவம் செய்து கங்கை நதியை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான். பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள், பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள், வியாச தேவரால் மஹாபாரதம் எழுதப்பட்ட பொன்னால் இன்று. அருட்கடலாம் ஆதி சங்கரரால் பொன்கனி வருஷிக்கும் வண்ணம், கனகதாரா ஸ்தவம் இயற்றப்பட்ட நாள் அட்சய திரிதியை நன்னாள்.
கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கௌரி தேவியை எழுந்தருளச் செய்து சொர்ண கௌரி விரதம் கடைபிடிப்பர். இதன்மூலம் பார்வதி தேவி, தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகின்றனர். குழந்தைப்பேறு, சுமங்கலிப் பாக்கியம், உடல்நலம் ஆகியவற்றுக்காக கர்நாடக பெண்கள் விரதம் இருப்பர். விரத முடிவில் அட்சய திருதியை தானமும் வழங்குவர்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி