மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத் துறை, ஓய்வூதிய விதியில் திருத்தம் செய்துள்ளது. ‘மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள், 2021-ன் 50-வது விதிப்படி, ஓய்வூதியம் பெறுபவர் இறந்துவிட்டால், அடுத்ததாக அந்த ஓய்வூதியத் தொகை அவரது கணவருக்கோ மனைவிக்கோ வழங்கப்படும்.
தற்போது இந்த விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, திருமண உறவில் நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண் ஊழியர்கள் மற்றும் பெண் ஓய்வூதியர்கள் தங்கள் கணவருக்குப் பதிலாக குழந்தைகளை ஓய்வூதியத்துக்கு வாரிசாக நியமிக்கலாம். விவாகரத்து, குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் கணவர் மீதுபுகார் அளித்துள்ள பெண் ஊழியர்கள் அல்லது பெண் ஓய்வூதியதாரர்கள், தங்கள் மறைவுக்குப் பிறகு ஓய்வூதியம் கணவருக்குப் பதிலாக தங்கள் குழந்தைக்குச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.