அரசு பள்ளியா கொக்கா?

இரண்டு நாட்களாக சரஸ்வதிக்கு ஒரே தலைவலி காரணம் வேறு ஒன்றும் இல்லை அவள் தன் மகனை அரசு பள்ளியில் சேர்த்திருந்தாள் அவ்வளவுதான், என்ன உன் பையனை கவர்மெண்ட் ஸ்கூல்லயா சேர்த்த, வேற ஸ்கூல் எதுவும் கிடைக்கலையா, அங்க படிப்பு நல்லா சொல்லி தரமாட்டாங்களே, அவன் கெட்டுபோயிடுவானே, அவனை பணம் கட்டி ஏதாவது நல்ல ஸ்கூல்ல சேர்த்து விட்டிருக்கலாமே என அவள் ஏதோ செய்யகூடாதது செய்துவிட்டதை போல சொந்தமும் சுற்றமும் இரண்டு நாட்களாக துக்கம் விசாரித்தனர்.

தன் மகனையோ மகளையோ அரசு பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள் பலருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் சமீபத்திய நிகழ்வுகளால் இனி இந்த நிலைமாறும் என எதிர்பார்க்கலாம்.

சுமார் 4000 பெண்கள் படிக்கும் இந்த பள்ளியில் எப்பொழுதும் 90 சதவிகிதத்திற்கும் குறையாத தேர்ச்சி சதவிகிதம் அதிலும் பலமுறை 100 சதவிகித தேர்ச்சி, தன் பெண் குழந்தைக்கு எப்படியாவது அந்த பள்ளியில் சீட் கிடைக்க வேண்டும் என விண்ணப்பத்தை பெற காலை முதலே கால்கடுக்க காத்திருக்கும் பெற்றோர், இந்த பள்ளியில் ஆசிரியர் பணி கிடைக்க வேண்டும் என பணி மாறுதலுக்கு காத்திருக்கு ஆசிரியர்கள் என பல ஆண்டுகளாய் பல சாதனைகளை சாதித்து வரும் ஒரு பள்ளியை பற்றி கேள்வி பட்டிருக்கின்றீர்களா? சத்தமில்லாமல் இவ்வளவு சாதனைகளை செய்துவரும் அந்த பள்ளி நீங்கள் நினைப்பது போல கண்டிப்பாக ஒரு தனியார் பள்ளி அல்ல அது ஒரு பெண்கள் அரசு மேல்நிலைபள்ளி!!!.

ஆம், சென்னையில் பல தனியார் பள்ளிகள் இருந்தாலும் அவற்றை விஞ்சும் தரத்துடன் இன்றளவும் செயல்பட்டு வரும் சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலை பள்ளிதான் இந்த அனைத்து சாதனைகளையும் செய்து வருகிறது. தான் கஷ்டப்பட்டது போல தன் மகனும் மகளும் கஷ்டப்படகூடாது, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என தன் வசதிக்கு மீறி கல்வி தரத்தை எண்ணி தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களை சற்றே திரும்பி பார்க்க வைக்கின்றன இதைபோன்ற சில அரசு பள்ளிகள்.

இது மட்டுஅல்ல பொதுவாகவே அரசு பள்ளிகளின் தரத்தை எப்போதும் குறை கூறுவோர்கள் அனைவரும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம். 10ஆம் வகுப்பு: அரசு பள்ளிகள் 92.48%, அரசு உதவிபெறும் பள்ளிகள்: 94.53%, +2’வில் 84.76% என தேர்ச்சி பெற்று சக்கைபோடு போட்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பயின்ற மாணவ செல்வங்கள், அது மட்டுமா கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக கூடியுள்ளது.

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்க்கு தேர்ச்சி சதவிகிதத்தை காட்டியுள்ள இந்த நிகழ்வு நம் மாணவ செல்வங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊக்கப்படுத்திய பெற்றோர்கள் மற்றும் அரசின் நடவடிக்கை என ஏற்பட்ட ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. இந்த நிலை நீடிக்க வேண்டும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும், அவர்கள் நம் தேசத்தை மேலும் முன்னேற்ற வேண்டும் என்பதே நம் அனைவரது எண்ணம்.

வருங்காலத்தில் என்ன உன் பையனுக்கு கவர்மெண்ட் ஸ்கூல்ல இடம் கிடைச்சுடுச்சா..ஹும் கொடுத்து வெச்சவன், என் பையனுக்கு கிடைக்கல, பிரைவேட் ஸ்கூல்ல தான் சேர்த்தோம் என பேசும் நிலை வர முயற்சிப்போம்.