இந்திய அரசியல் சாசனம் வரையறுக்கப்பட்டு 70வது ஆண்டு காலம் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டு வரும் விழாவில் அரசியலமைப்பு சட்டம் இந்தியாவின் புனித நூல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் அரசியல் சாசனம் நடைமுறைபடுத்தப்பட்ட இந்நாளில், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை இந்த தருணத்தில் நினைவு கூருகிறோம் என வருத்தத்தையும் பதிவு செய்தவர், இந்தியாவின் மாபெரும் தலைவர்கள் பலதரப்பட்ட மக்களின் நலன் கருதி வரையறுத்துள்ள இந்த சட்டம், இந்தியர்களின் பெருமையை நிலைநாட்டும் ஒன்று என்றும், நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு போன்றது. இந்திய குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் இரண்டையும் எடுத்துக்காட்டும் இந்த சட்டம் தான் நமக்கான புனித புத்தகம். அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை என்றும், இத்தகைய உன்னதம் வாய்ந்த புத்தகத்தை இந்தியர்கள் ஒருபோதும் தலை குனிய செய்ததே இல்லை என்று கூறி அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
நமது உரிமைகளையும் கடமைகளையும் மிக அழகாகவும் தெளிவாகவும் கூறியிருக்கும் இதன் மரியாதையை காக்க வேண்டியதும், மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்று கூறினார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள், 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்டன. அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்க உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் 296 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். அந்த குழுவில் இந்திய அரசியல் சாசனத்தின் பிதாமகன் என அழைக்கப்படும் டாக்டர். அம்பேத்கர் முதலில் இடம்பெறவில்லை.
கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த யோகேந்தரநாத் மண்டல் என்பவர் குழுவிலிருந்து வெளியேறியதை அடுத்து டாக்டர் அம்பேத்கர் சேர்க்கப்பட்டார். கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளின் அரசியல் சாசன சட்டத்தில் உள்ள பிரிவுகளை கொண்டு இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அன்று முதல் இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவில் கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், V.T.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்தக் குழுவினர், 166 முறை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இக்குழுவினர் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கையால் எழுதப்பட்டு கையொப்பமிடப்பட்ட தனது அறிக்கையின் இரண்டு பிரதிகளைட 1948, பிப்ரவரி 21 ஆம் தேதி ஒப்படைத்தது. நவம்பர் 4 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையில் ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையின் தலைவர் ராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நினைவாக 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, இந்தியா பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து நீக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 103 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் (Articles)மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்ட தினம், 2015 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 70-வது ஆண்டு தின விழா கொண்டாட்டப்படுகிறது.