அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முகநூலில் கருத்து- பெ.மணியரசன், பழ.நெடுமாறன் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு

அயோத்தி வழக்கு தீர்ப்புக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டதாக பெ.மணியரசன், பழ.நெடுமாறன் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அயோத்தி பிரச்சினை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்புக்கு எதிராக தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் அரங்க.குணசேகரன் ஆகியோர் முகநூலில் கருத்துகளைப் பதிவிட்டதாக தஞ்சாவூர் கிழக்குக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜீவகன் புகார் தெரிவித்துள்ளார்.

இதன்பேரில் பெ.மணியரசன், பழ.நெடுமாறன், குணசேகரன் ஆகியோர் மீது தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் கடந்த பிப்.29-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் மின்னணு ஊடகம் மூலம் மக்களைத் தவறாக வழி நடத்துதல், ரகசியத்தன்மை மற்றும் தனியுரிமையை மீறியது, சட்டபூர்வமான ஒப்பந்தத்தை மீறி தகவல்களை வெளியிடுதல், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நீதித் துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியருக்கு வேண்டுமென்றே அவமதிப்பு அல்லது குறுக்கீடு செய்தல், அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பது, பல்வேறு சமூகத்தினரிடையே பகை, வெறுப்பு அல்லது தவறான அறிக்கையை உருவாக்குதல் அல்லது ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.