அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு இலங்கையில் உள்ள சீதை அம்மன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
ராமாயணத்தில் ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் வனவாசம் சென்றபோது, சீதையைக் கவர்ந்தமன்னன் ராவணன், இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சிறைவைத்தார். சீதை இருந்த அசோகவனம், தற்போது இலங்கையில்`சீதா எலிய’ என அழைக்கப்படுகிறது. இலங்கையின் மலையகத்தில் உள்ள நுவரெலியா நகரில் இருந்து5 கி.மீ. தொலைவில் “சீதா எலிய”அமைந்துள்ளது. இந்தப் பகுதி காடு,ஆறு, மலைகள் சூழ, இயற்கை எழில்கொஞ்சும் இடமாகவும், உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியதாகவும் உள்ளது. இங்கு சீதையை மூலவராகக் கொண்ட, பிரசித்தி பெற்ற சீதை அம்மன் கோயில் உள்ளது.
இந்தக் கோயில் அருகே ஓடும் ஆற்றில் சீதை நீராடினார் என்பதால், இதற்கு சீதா ஆறு என்று பெயர். இலங்கையில் சீதையை தேடி வந்தஅனுமார், முதன்முதலில் சீதையைசந்திப்பதுபோல, இந்த ஆற்றங்கரையில் சிலை அமைந்துள்ளது.
சீதை அம்மன் கோயிலின் பின் பகுதியில் உள்ள பாறைகளில் காணப்படும் காலடிகளைப் போன்றபள்ளங்கள் அனுமார் பாதம் என்றுகருதப்படுகிறது. கோயிலில் உள்ள மரங்களில் காணிக்கை வைத்து வேண்டினால், அந்த வேண்டுதல் நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
அயோத்திக்கு சென்ற கல்: அசோக வனத்தில் சீதையை சிறை வைத்திருந்ததாக ராமாயணத்தில் பதிவாகி உள்ளது. எனவே, சீதைஅம்மன் கோயில் இருந்து புனிதசின்னமாக கல் ஒன்று, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காகஅனுப்பப்பட்டது. அப்போது, இந்தபுனித சின்னம் சீதை அம்மன்கோயிலிலிருந்து அனுப்பப்படுவதால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உறவுப் பாலமாக இதுஅமைந்திருக்கிறது என இலங்கை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு, இலங்கையில் உள்ள சீதை அம்மன்கோயிலுக்கு வரும் இந்திய பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள், தம்பதியரின் ஒற்றுமை மற்றும் குழந்தைச் செல்வத்துக்காக வழிபாடு செய்கின்றனர். சீதை அம்மன் கோயில் கொழும்புவிலிருந்து 180 கி.மீ. தொலைவிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 400 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.