அயோத்தியில் தியாகிகள் நினைவகம்

அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப பல்வேறு புதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல வசதிகள் எதிர்காலத்தில் செய்து கொடுக்கப்பட இருக்கின்றன.

இவை குறித்து ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:-

ஸ்ரீ ராமர் ஆலய வளாகத்தில் கூடுதலாக வசதிகள் செய்து கொடுக்கப்படும். இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப திட்டமிட்டு படிப்படியாக நிறைவேற்றுவோம்.
விழாக்காலத்தின்போது, கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.

`கும்ப மேளா’ போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். ஆலய வளாகத்தில் புதிதாக சிற்றாலயம் அமைக்கப்படும். இங்குதான் பாலராமரின் சிலையும், அவரது சகோதரர்களின் சிலைகளும் பிராண பிரதிஷ்டைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தன.

2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி வரை, மரக்கட்டமைப்பின் கீழ்தான் சிலைகள் யாவும் வைக்கப்பட்டிருந்தன. இதை மிகவும் புனிதமானது என பக்தர்கள் கருதுகின்றனர். அவர்களது எண்ணம் ஈடேறும் வகையில், நிரந்தர சிற்றாலயம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அயோத்தி ஜென்ம பூமியில், ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக ஏராளமானோர் உயர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களது தியாகம் ஒருபோதும் வீணாகாது என்பதை உணர்த்த கடமைப்பட்டுள்ளோம். இதற்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூறும் வகையில், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் வளாகத்திலேயே தியாகிகளுக்காக நினைவு மண்டபம் எழுப்பப்படும்.

காலணிகளைப் பாதுகாப்பது முக்கியப் பணியாகும். இதில் கவனம் செலுத்துகிறோம். ஆலய வளாகத்தில் 2 இடங்களில் காலணிப் பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் 25,000 ஜோடி காலணிகளைப் பாதுகாக்க வசதி செய்யப்படும். ஒரு நாளில் குறைந்தபட்சம் 2 லட்சம் ஜோடி காலணிகளை கையாள வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, அதற்கேற்ப கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். இதனால் பக்தர்கள் ஆலயத்துக்கு வருவதும், வெளியே செல்வதும் எளிதாக்கப்படும்.

பாதுகாப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான வடிவமைப்பை உருவாக்க மத்திய ரிசர்வ் போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, சிறப்பு பாதுகாப்புப் படை ஆகியவற்றிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம். இந்தப் பணி 2026ல் பூர்த்தியடைந்து விடும் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. கட்டமைப்பு மிகவும் வலிமையானது என்பதால் கூடுதலாக சில மாதங்கள் தேவைப்படலாம்.

டிசம்பர் 31ம் தேதி பிராண பிரதிஷ்டை ஏகாதசியாகும். இவ்விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி