இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றவுடன் அவருக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியதுடன் பாரதம் வருமாறு வேண்டுகோளும் விடுத்தார். இலங்கை அதிபர் அதை ஏற்று 3 நாள் பயணமாக பாரதம் வந்தார்.
தனது நல்லெண்ணத்தின் அடையாளமாக இலங்கையில் சிறையில் வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் (தமிழர்களின்) அனைத்து படகுகளும் விடுவிக்கப்படும் என்று அறிவித்தார். இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுக்கால குத்தகையில் வழங்கியுள்ள ஒப்பந்தத்தை இலங்கை அரசு ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.
இலங்கையில் சீன ஆதிக்கம் வருவது நமது பாதுகாப்புக்கு ஆபத்தானது. அதனால் இலங்கை முழுவதுமாக சீனா பக்கம் சாயாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது நாட்டின் பொறுப்பாகும். அந்த வகையில் இலங்கையுடன் நல்லுறவைப் பேணுவது நமது ராஜதந்திர நடவடிக்கைகளின் அம்சம்.
இலங்கையின் வளர்ச்சி, கட்டமைப்பு, மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்தியா 3213 கோடி ரூபாய் நிதி வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா ஏற்கனவே 42,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.மேலும் 14,000 வீடுகள் கட்டிக் கொடுக்க பாரத அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.இதெல்லாம் நமது பிரதமர் மோடியின் ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள். மோடியின் ராஜதந்திர நடவடிக்கைளைப் பாராட்ட வேண்டியது நமது கடமை.
ஆனால் வை-கோ, திருமா வகையறாக்கள் இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். இலங்கை அதிபருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்கிறனர். இந்த அரசியல் கோமாளிகளை தமிழக மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். தமிழக அரசியல் களத்திலிருந்து இவர்களை அப்புறப்படுத்த வேண்டியது தமிழக மக்களின் பொறுப்பு.