அம்ரித் பாரத் திட்டம்: மேலும் 15 ரயில் நிலையம் தேர்வு

‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் மேலும், 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணியை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன்படி, தெற்கு ரயில்வேயில், செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனுார், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் உட்பட, 25 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை அடுத்த ஆண்டு பிப்., மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ‘இதேபோல, 2வது கட்டமாக, 15 ரயில் நிலையங்களை தேர்வு செய்து மேம்படுத்த உள்ளோம். இதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது’ என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.