அம்பாளின் திவ்ய நெய்க்குள தரிசனம்

அம்பாளைப் போற்றித் துதிக்கும் நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் என்பதாக விற்பன்னர்கள் கூறுகின்றார்கள். ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ‘ஸ்ரீபுரம்’ என்ற இடத்தில் வசிப்பதாகக் கூறுகிறது புராணங்கள். அந்த ஸ்ரீபுரத்தில் திவ்யமான ராஜ கிருஹத்தின் நடுவில் நவரத்தின மயமான சபையில் சிந்தாமணியால் உருவாக்கப்பட்ட கோடி சூர்ய பிரகாசத்துடன் கூடிய, ஒப்புயர்வற்ற, அழகிய சிம்ஹாசனத்தில் அம்பாள் ஸ்ரீ பரமேஸ்வரருடன் அமர்ந்திருக்கிறாள். அந்த ஸ்ரீபுரமே ஸ்ரீ சக்ரவடிவில் ஸ்ரீவித்யா உபாசகர்களால் பூஜிக்கப்படுகிறது. அந்த ஸ்ரீசக்கரத்தில் ஆவரணம் என்ற ஒன்பது சக்கரங்கள் இருக்கின்றன. அதன் நடுவில் பிந்து வடிவமாக இருக்கும் இடத்தில் ஸ்ரீமாதா காமேஸ்வரருடன் சேர்ந்து அமர்ந்து ஐந்தொழிலையும் செய்து வருகிறாள். அந்த ஸ்ரீசக்கரமே நம் உடல். நவ ஆவரணங்களும் நம் உடலிலேயே உள்ளன. ஸ்ரீமாதா நம்மிலேயே உறைகிறாள் என்பது இதன் பொருள்.

இந்த அம்பாளை ஸஹஸ்ராரத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் தாமரையில் அமர்ந்திருப்பதாக தியானிக்க, தியானிக்க நமக்குள் எல்லையற்ற பேரானந்தம் உண்டாகிறது என்பது உண்மை. இத்தனை மகிமை வாய்ந்த லலிதாம்பிகை கொலுவீற்று உள்ள ஸ்தலம் திருமயிச்சூர் ஆலயம். திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் கிடைக்கப் பெறும் தரிசனம் நெய்க்குள தரிசனம்.

வருடாவருடம் நவராத்ரி நிகழ்வின்போது மிகவும் பிரசித்தி பெற்றது அம்பாளின் திவ்ய தரிசனமும் நெய்க்குள தரிசனமும். விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையைப் பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றையும் தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய்க் குளத்தில் பிரதிபலிக்கும். இதனைத் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.

ஐந்தாவது நாள்: பஞ்சமி திதியான இன்று நாம் வழிபடவேண்டிய தெய்வம் பரமேஸ்வரி. பரமேஸ்வரனின் சக்தி என்பதால் இவள் பரமேஸ்வரி என்றும், கந்தப்பெருமானின் அன்னையானதால் ஸ்கந்த மாதா என்றும் அழைக்கப்படுகிறாள். இன்று ஐந்து வயது சிறுமிக்கு ரோகிணி என்ற திருநாமம் கொண்ட திருக்கோலம் அமைத்து பூஜிக்க வேண்டும். நைவேத்தியமாக புளியோதரை, உளுந்து பலகாரங்கள், பருப்பு பாயசம் செய்து அம்பாளுக்குப் படைக்கலாம். சிறப்பு ரங்கோலியாக மலர்க் கோலமும், சிறப்புப் புஷ்பங்களாகத் தாமரை, செவ்வல்லி, முல்லை போன்றவை பயன்படுத்தலாம்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி