அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலி பகுதியில் வசிக்கும் இந்திய – அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க நீதித்துறை, புலனாய்வுத் துறை(எப்பிஐ), போலீஸார் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு இந்திய – அமெரிக்கர்கள் அமைப்பின் தலைவர் அஜய் ஜெயின் புடோரியா ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் அமெரிக்க உயரதிகாரிகள் மற்றும் 24-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.
அப்போது, கலிபோர்னியாவில் இந்துக்கள் மற்றும் ஜெயினர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்துக்கள், ஜெயினர்களின் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என்று கூறி இந்திய -அமெரிக்கர்கள் கடும்கண்டனம் தெரிவித்தனர். மேலும்அமெரிக்காவில் இருந்து கொண்டுஇந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு துணை புரிபவர்கள் மீது, அமெரிக்க போலீஸ் மற்றும் எப்பிஐ அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
‘‘காலிஸ்தான் ஆதரவாளர்கள் பள்ளிக்கு வெளியில் டிரக்குகளை நிறுத்தியும், இந்திய மளிகைக் கடைகள் முன்பும் சூழ்ந்து இந்திய – அமெரிக்க இளைஞர்களை மிரட்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை எரிக்க சிலர் முயற்சித்தனர். இந்திய தூதர்களுக்கு பகிரங்கமாகவே அவர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். இந்தியாவில் தீவிரவாத செயல்களை தூண்டும் வகையில் பகிரங்கமாகவே பேசுகின்றனர். அந்த சம்பவம் உட்பட எத்தனையோ புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’என்று இந்திய அமெரிக்கர்கள் சரமாரியாக புகார் கூறியுள்ளனர்.
அதற்கு எப்பிஐ மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘காலிஸ்தான் இயக்கத்தினர் பற்றி எங்களுக்கு தகவல் இல்லை. எனினும், இந்த விஷயத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய அமெரிக்கர்கள் உதவ வேண்டும். இது தவிர சில சம்பவங்களில் நடவடிக்கை எடுக்க முடியாததற்கு அதிகாரிகள் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை போன்ற பல காரணங்கள் உள்ளன. எனவே, முன்னுரிமை அளிக்கப்பட வேண் டிய விவகாரங்களில் கவனம்செலுத்துகிறோம்’’ என்றனர். இதுகுறித்து அஜய் ஜெயின் புடோரியா கூறும்போது, ‘‘கடந்த 4 மாதங்களில் மட்டும் 11 கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இந்திய – அமெரிக்கர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எனினும் நாங்கள் ஒன்றிணைந்து பலமாக செயல்பட வேண்டும் என்று தீர்மானித்துள்ளோம்’’ என்றார்.