கர்நாடக மாநிலத்தில் வகுப்புவாத பிரச்சனைகள் அதிகமுள்ள கடலோரப் பகுதியில் ஜூலை 19 முதல் 28 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற மூன்று கொலைகள் கர்நாடகாவை உலுக்கின. மேலும் பிரவீன் நெட்டாருவின் கொலை, பா.ஜ.கவின் இளைஞர் பிரிவினரால் அதன் கட்சி மற்றும் மாநில அரசுக்கு எதிரான மனநிலைக்கு வழிவகுத்தது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ஆகியோரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழலில், தற்போது பெங்களூரு சென்றிருந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, பிரவீன் நெட்டாரு கொலை வழக்கு தொடர்பாக அரக ஞானேந்திராவை கடிந்துகொண்ட்தாக கூறப்படுகிறது. ஜனேந்திராவைத் தவிர, பா.ஜ.க மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீலையும் அவர் கடிந்துகொண்டார். இந்த மூன்று கொலைகளும் அவரது மக்களவைத் தொகுதியான தட்சிண கன்னடத்தில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் உள்ள கட்சித் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் எப்படி கட்சி பொறுப்பாளர்களின் மனநிலைகளை படிக்கத் தவறினர். அவர்களின் இவ்வளவு கோபத்தை எப்படி கவனிக்காமல் போக அனுமதித்தனர் என இதுகுறித்து அமித்ஷா கேள்வியெழுப்பினார். மேலும், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணைக்கான கோரிக்கைகள் பற்றிய தகவல்களையும் அமித்ஷா கோரினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரக ஞானேந்திரா “நாங்கள் உங்கள் முன் அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் அமித்ஷா, இதில் மேலும் விரிவான தகவல்களை கோரினார் என்று கூறுவதற்குப் பதிலாக, அவர் தகவல்களைத் தேடினார் என்று கூறலாம்” என தெரிவித்தார். முன்னதாக பிரவீன் நெட்டாரு கொலை வழக்கு குறித்து கடந்த மாதம் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ஆரம்பகட்ட அறிக்கைகள் மற்றும் சில ஊடக அறிக்கைகள், இக்கொலை வழக்கில் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் பி.எப்.ஐ அமைப்பினரின் தொடர்பை குறிப்பிடுகின்றன. கேரளாவில் அவர்களுக்கு பயிற்சி, ஊக்கம் அளிக்கப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் அவர்களை ஊக்கப்படுத்தியது. கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும், சட்டத்தின் முன் நிறுத்தும்” என்று கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.A