அபுதாபி இந்து கோயில் கட்டுமானத்தில் உருக்கு, இரும்பு பயன்பாடு இருக்காது – கோயில் நிர்வாகம் தகவல்

அபுதாபி இந்து கோயில் கட்டுமானத்தில் இரும்பு, உருக்கு பயன்படுத்தமாட்டோம். பாரம்பரிய இந்திய கட்டுமான கலையின் அடிப்படையில் கோயில் கட்டப்படும் என்று கோயில் கமிட்டி தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி அருகே அபு முரேகாவில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்ட இந்து கோயில் கட்டப்படுகிறது. கடந்த 2018 பிப்ரவரியில் கோயில் கட்டுமானப் பணியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து கோயில்களை நிறுவி பராமரித்து வரும் பிஏபிஎஸ் அமைப்பு, அபுதாபி கோயிலையும் கட்டி வருகிறது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் அஸ்திவாரம் போடப்பட்டது.

இதில் பிஏபிஎஸ் அமைப்பின் மூத்த அர்ச்சகர் பிரம்ம விகாரி தாஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்திய தூதர் பவன் கபூர் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் கட்டுமானப் பணிகள் குறித்து கோயில் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் அசோக் கூறியதாவது:

பொதுவாக உருக்கு, கான்கிரீட்டை பயன்படுத்தி அஸ்திவாரம் அமைப்பார்கள். ஆனால் அபுதாபி கோயில் கட்டுமானத்தில் உருக்கு, இரும்பை பயன்படுத்த மாட்டோம். இந்திய பாரம்பரிய கட்டுமான கலையின்படி இந்த கோயிலை கட்ட உள்ளோம். கோயில் அஸ்திவாரத்தில் நிலக்கரி சாம்பலை பயன்படுத்தியுள்ளோம்.

கட்டுமானப் பணிகளுக்காக இந்தியாவில் சுமார் 3,000 கைவினைஞர்கள் இரவு, பகலாகப் பணியாற்றி வருகின்றனர். சுமார் 500 டன் எடை கொண்ட கற்களில் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கற்களை போன்று அபுதாபி கோயிலிலும் பாறைகள் பயன்படுத்தப்படும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சில நேரங்களில் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும். அதை தாங்கும் வகையில் சிறப்பு கற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கோயில் வளாகம் அமைக்கப்படும்

அபுதாபி கோயிலில் கிருஷ்ணன், சிவன், ஐயப்பனின் சிலைகள் வைக்கப்பட உள்ளன. வரும் 2022-ம் ஆண்டில் கோயில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் வளாகத்தில் திருமண மண்டபம், வர்த்தக வளாகங்களும் கட்டப்பட உள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 26 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அங்கு வாழும் இந்தியர்கள் கூறும்போது, “தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விழாக்களை வீட்டில் சிறிய அளவில் கொண்டாடுகிறோம். அபுதாபி கோயில் கட்டப்பட்ட பிறகு முக்கிய பண்டிகைகளை கோயிலில் கொண்டாடுவோம். இதன்மூலம் தாய்நாட்டில் இருக்கும் உணர்வு கிடைக்கும்” என்று தெரிவித்தனர்.