”அனைவரும் ஒன்று என, வள்ளலார் கூறுவது தான் சனாதன தர்மம்,” என, கவர்னர் ரவி கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், வள்ளலாரின், 200வது பிறந்த நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. வள்ளலாரின் சிலையை திறந்து வைத்து, அணையா தீப ஒளியை, கவர்னர் ஏற்றினார். பல்வேறு துறைகளில் சமூக சேவை ஆற்றிய, 18 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின், கவர்னர் பேசியதாவது: தமிழகத்திற்கு வந்த பின் தமிழ் வரலாறு, தமிழ் இலக்கியம், தமிழ் கல்வெட்டுகள், நாட்டுப்புற கதைகள் உள்ளிட்ட பலவற்றை குறித்து தெரிந்து கொள்ள முடிந்தது. என்னுடைய புரிதல் அடிப்படையில், தமிழுக்கு இணையாக சமஸ்கிருதம் தவிர, வேற எந்த மொழியிலும் ஆழமான அர்த்தங்கள், பாவனைகள் இல்லை. வள்ளலாரின் கருத்துகள் பாரதத்தின் அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளன. பாரத நாடு, தனித்துவம் வாய்ந்தது. பாரத நாடு என்பது, ஐரோப்பிய நாடுகள் சொல்வது போன்ற ஒரு அரசியல் சாசனம் வகுக்கப்பட்ட நாடு அல்ல. அதையெல்லாம் விட, பாரதம் பெரியது.
இவ்வளவு வேற்றுமை உள்ள நாடு, வேறு எதுவும் இல்லை. உணவு, உடை, மொழி என பல வேற்றுமைகள் இங்கு உள்ளன; இருப்பினும் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். பாரதம் என்பதை புரிந்துகொள்ள, நாம் வள்ளலார் போன்றோரை புரிந்து கொள்ள வேண்டும். நாம் எல்லாரும் ஒன்று என்னும் வள்ளலாரின் கருத்தே, சனாதனத்தின் ஆணிவேர்.
‘வாடிய பயிரை கண்டப் போதெல்லாம் வாடினேன்’ என, வள்ளலார் கூறிய கருத்துக்கள் சனாதனத்தை வெளிப்படுத்தும்போது, எப்படி மனிதர்கள் மத்தியில் வேற்றுமையை, சனாதனம் வலியுறுத்த முடியும்? வன்முறை, சனாதனத்திற்கு எதிரானது! சமூகத்தில் உள்ள வேற்றுமைகள் தான் சனாதனம் எனக் கூறும் நபர்களை என்ன சொல்வது என தெரியவில்லை. நான் ஒரு சனாதனவாதியாக இருப்பதால், அவர்கள் நம்மை சேராதவர்கள் என, சொல்ல முடியாது.
ஏனெனில் சனாதனத்தில், மற்றவர்கள் என யாரும் இல்லை. என்னை அசிங்கப்படுத்தினாலும், நான் அவர்களை ஒதுக்க முடியாது; அது தான் சனாதனம். இவ்வாறு அவர் பேசினார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி புகழாரம்!
காணொலி காட்சி வாயிலாக, பிரதமர் மோடி பேசியதாவது:வள்ளலார், சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தும் ஜீவ காருண்யம் முறையில் நம்பிக்கை கொண்டிருந்தார். பசியை போக்குவது, அவரது முக்கிய பணியாக இருந்தது.வள்ளலார், கற்பதையும், கற்பிப்பதையும் நம்பினார். பிறருக்கு வழிகாட்ட அவர் கதவுகள் எப்போதும் திறந்தே இருந்தன. நவீன கல்வி திட்டத்திற்கு, அவர் முக்கியத்துவம் அளித்தார்.
தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை பெற வேண்டும் என, நம்பினார். வள்ளலார், காலத்திற்கு முன்பே சிந்தித்தவர். இந்த உலகத்தின் ஒவ்வொரு இடத்திலும், அவர் கடவுள் அம்சத்தை கண்டார். மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை, அவர் உயிரோடு இருந்தால் பாராட்டி இருப்பார். இவ்வாறு அவர் பேசினார்.