ஸ்ரீ சையத் கனி கான், மத்திய கர்நாடகாவின் ‘கிருகவாலூ’ என்ற கிராமத்தில் உள்ள 38 வயது விவசாயி.
ஒரு முறை வயலில் ரசாயன உரத்தால் ஏற்பட்ட நச்சுபுகையால் மயங்கி விழுந்த அவர் பின் இயற்கை விவசாயத்திற்கு மாறினார். ஒருமுறை அவருக்கு கிடைத்த நெல் விதைகள் நல்ல விளைச்சல் அளித்தும் யாருக்கும் அது எந்த வகை நெல் என்று தெரியவில்லை. அதை பற்றி விசாரித்தபோது அது மறைந்து வரும் ‘ரத்ன சூடி’ என்ற நெல் வகை என்பதை அறிந்தார். அன்று முதல் பல அரிய வகை நெல்விதைகளை சேகரிப்பதை தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டார். இவருக்கு ‘இயற்கை விவசாயிகள் சங்கம்’ ஆதரவு அளித்து வருகிறது.
இவரது முயற்சியால் இன்று நாட்டிலேயே இரண்டாவது அதிக நெல்விதை சேமிப்பை வைத்துள்ளார். அவரிடம் 700 வகை நெல்விதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இவரது 20 ஏக்கர் நிலத்தில் 120 வகை மாம்பழங்கள் உள்ளன. அதில் சில 250 ஆண்டுகள் பழமையான ரகம். மேலும் இவர் கரும்பு, கோதுமை, சப்போட்டா, மாதுளை, சீதாப்பழம், தக்காளி, கத்திரிக்காய், சக்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றையும் பயிரிடுகிறார்.
இவரதுஇந்த சாதனையை கவுரவிக்கும் விதமாக 2010ல் கர்நாடக அரசு ‘கிருஷி ஜீவ விவித்ய’ என்ற விருதை வழங்கியது. இவர் ‘கிருஷி பண்டிட்’ என்ற விருதும் பெற்றுள்ளார்.
இவரிடம்உள்ள நெல்விதைகளை பயிரிட நினைக்கும் விவசாயிகளுக்கு அதன் விவரங்களை கற்றுக்கொடுத்து வழிகாட்டுகிறார். பல இளைஞர்கள் விவசாயத்தை தங்கள் தொழிலாக தேர்ந்தெடுக்க இவர் முன்னுதாரணமாக திகழ்கிறார்.