அதீத சிநேகிதமும் சுதேசி நலனுக்காகவே

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதும் நரேந்திர மோடி இரு தேச உறவை பலப்படுத்தும் வகையில் பயணம் மேற்கொண்ட முதல் நாடு ரஷ்யா. உலக அரங்கில் நேட்டோ நாடுகள் ரஷ்யாவை உக்ரேனிலிருந்து தோற்றோடச் செய்ய திட்டம் தீட்டிக் கொண்டிருக்கையில் பாரதப் பிரதமர் ரஷ்யா சென்றார். இங்கே சற்று வரலாறும் இன்னும் சற்று புவியியலும் அறிவது பொருந்தும்.

வரலாறு: பாரதத்தின் ராணுவ தளவாட தேவைகளில் 60 சதவீதம் வரை ரஷ்ய தயாரிப்புகள் என்ற பாரம்பரியத்தை தொடர்ந்து -இன்று தமிழகத்தில் ரஷ்ய கூட்டு முயற்சியாக ஆறு அணுமின் நிலையங்கள் உருவாகி வருகின்றன. இவற்றில் இரண்டு ஏற்கனவே செயல்படத் தொடங்கி விட்டன. மறுபுறம் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் நமக்கு கிரையோஜெனிக் நுட்பம் உள்பட எதையும் தருவதற்கு தயக்கம் காட்டி வந்தன.  இதெல்லாம் அமெரிக்க, ரஷ்ய பனிப்போர் காரணமாக உருவான உறவு நிலைகள்.

புவியியல்:  பாரதத்தில் இருந்து ஈரான் வரை என்பது போல பூமிப் பந்தின் அட்சரேகை நெடுக தடையற்ற போக்குவரத்து இந்த வட்டாரத்தில் நமக்கு பெரிய மனிதர் அந்தஸ்தை தேடிக் கொடுக்கும். அதே அந்தஸ்துக்கு தீர்க்க
ரேகை மார்க்கமாக பாகிஸ்தான் உதவியுடன் சீனா குறுக்குச்சால் ஓட்ட தொடங்கி விட்டது. எனவே பாரதம் / ஈரான்  / ரஷ்யா கூட்டு
முயற்சியிலான ‘சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து தாழ்வாரம்’ எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.

இதற்கிடையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரதம் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலியம் எண்ணெய் இறக்குமதி செய்வது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் ஐரோப்பிய யூனியன் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்ததுதான். உன் கோபம் என் லாபம்! சும்மா இருக்காமல் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலை முடுக்கிவிட்டு பாரதம் ஐரோப்பிய நாடுகளின் அதிகரித்த பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்து வருகிறது!

‘சர்வதேச எரிசக்தி எண்ணெய் சந்தையில் மந்த நிலைமை ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள ஏதோ எங்களால் ஆனது’ என்று ஐரோப்பிய யூனியனை கிண்டலடிக்கவும் மோடி தயங்கவில்லை. சர்வதேச அரங்கில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை, அவரவர் தேச நலனே முக்கியம் என்பதை பாரதம் செய்து காட்டி உலகிற்கு வகுப்பு எடுத்து வருகிறது.

‘அப்பனே அமெரிக்கா, நீ தான் உலகத்திலேயே பெரிய வஸ்தாது என்று நினைத்துக் கொள்ளாதே. அதோ பார், சீனாக்காரன் உன்னுடன் போட்டிக்கு வருகிறான்’ என்று பாரதம் அமெரிக்காவுக்கு வெறுமனே கொம்பு சீவி விட்டு விட்டு சும்மா இருக்காமல் ‘தென் கடல் வட்டாரத்தில் நீ போடும் கணக்கு தப்பாகி விடாமல் இருக்க அங்கேயும் நீ சீனாவை கவனித்தாக வேண்டும்’  என்று அமெரிக்காவிடம் பேச்சு கொடுத்து, எல்லையில் தொல்லை கொடுக்கும் சீனாவுக்கு பாரதம் இரட்டைத் தாழ்ப்பாள் போட்டிருப்பது உலகின் கவனம் கவர்கிறது.

ஆதாரம்: முன்னாள் பாரத தூதரும் விவேகானந்தா இண்டர்நேஷனல் பவுண்டேஷன் மூத்த ஆராய்ச்சியாளருமான பி.எஸ். ராகவன்
‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் ஜூலை 13 அன்று எழுதிய கட்டுரை.