கொரோனா நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா, “நமது நாட்டில் இயல்பான நோய் தொற்று, அதனால் கிடைக்கும் நோய் எதிர்ப்புசக்தி மற்றும் தடுப்பூசி என நோய் எதிர்ப்புசக்திகள் நம்மிடம் உள்ளன. எனவே, சீனா உட்பட பல நாடுகளில் அதிகரித்துள்ள கரோனா தொற்றை கண்டு நாம் அதிகம் பயப்பட தேவையில்லை. சீனாவில் கடைபிடிக்கப்பட்ட ‘ஜீரோ கோவிட்’ என்ற கொள்கையால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், அந்நாட்டில் ஏற்படும் இயற்கையான நோய் தொற்று, அதன்மூலம் ஏற்படும்நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடம் ஏற்படவில்லை. அத்துடன் சீனாவின் கொரோனா தடுப்பூசி எந்தளவுக்கு கொரோனா தொற்றை குணப்படுத்துகிறது என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. சீனாவில் பெரும்பாலான முதியோருக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக அங்கு கொரோனா தொற்று பிரச்சனை தீவிரம் அடைந்துள்ளன. எனவே, பாரதத்தில் மக்கள் அதிகம் பதற்றம் அடையத் தேவையில்லை. அதேவேளையில் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளை தொடர்ந்து கண்காணிப்பது, புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரை கண்டறிவது அவசியம். விமான நிலையங்களில் வந்திறங்கும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது” என தெரிவித்துள்ளார்.