அதர்மவாதிகளை வேரோடு வீழ்த்தி சனாதன தர்மத்தைக் காப்போம்

ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத் விஜயதசமி உரையில் கலாச்சார மார்க்சிஸம், வோக்கிஸம், டீப் ஸ்டேட் போன்றவை குறித்து குறிப்பிட்டது பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது.

மோகன் பாகவத் எதையும் மிகையாக கூறவில்லை. சித்தாந்த ரீதியாக பாரத கலாச்சாரத்துக்கும், விழுமியத்திற்கும் எதிராக செயல்படுபவர்களை வேரறுக்க சங்கம் ஆயத்தமாகி விட்டது என்பதையே இது பிரதிபலிக்கிறது. சர்சங்கச்சாலக் மோகன் பாகவத் எதையும் மேலோட்டமாகக் குறிப்பிடவில்லை. இதை வெறும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது. கலாச்சார மார்க்சிஸம், சனாதன தர்மத்தின் மீதான கடும் தாக்குதல் என்றே கருத வேண்டும். கலாச்சார மார்க்சிஸ்டுகள், ஊடகம், கல்வி, கலை போன்ற துறைகளில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஊடுருவி பாரதத்தின் தொன்மையான நாகரீகத்தையும், பண்பாட்டையும் சிதைக்க முற்படுகின்றனர்.

கார்ல் மார்க்ஸும், பிரடெரிக் ஏங்கல்ஸும் சமூக பொருளியல், அரசியல் கோட்பாட்டை உருவாக்கினார்கள். இக்கோட்பாடு பெரும்பாலும் பொருளாதாரத்தை மையப்படுத்திய அரசியல் அணுகுமுறையாகும். உலகத்தில் வசதிபடைத்தவர்களுக்கும், வறுமையில் வாடுபவர்களுக்கும் இடையே இடைவிடாமல் மோதல் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். பூர்ஷுவாக்கள் எனப்படும் மேட்டுக்குடி மக்கள், பிராலிட்டரியேட் எனப்படும் உழைக்கும் வர்க்கத்தினரை சுரண்டிக் கொண்டே இருப்பார்கள். இந்த கொடுங்கோலுக்கு அதாவது முதலாளிகளின் சுரண்டலுக்கு பிராலிட்டரியேட் ரெவலூஷன் எனப்படும் பாட்டாளி மக்கள் புரட்சியே தீர்வு. முதலாளித்துவம் முற்றிலுமாக தூக்கி எறியப்படும் வர்க்க பேதமற்ற சமூகம் உருவாக்கப்படும். தனியுடைமை மறைந்து விடும். சொத்து பொதுவுடைமையாகவே இருக்கும் என்றெல்லாம் கார்ல் மார்க்ஸும், பிரடெரிக் ஏங்கல்ஸும் கூறினார்கள்.

இதை சாத்தியப்படுத்த, நடைமுறையில் உள்ள நம்பிக்கைகளையும், மதங்களையும் முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். “மதம் அபினைப் போல மக்களை போதையில் ஆழ்த்துகிறது’’ என்று கார்ல் மார்க்ஸ் எழுதியுள்ளார்.

கம்யூனிஸம் என்பது வார்த்தையளவில் கற்பனை உலகை காட்சிப்படுத்தியது. ஆனால் நடைமுறையில் இதற்கு முற்றிலும் மாறானதுதான் அரங்கேறியது. சோவியத் யூனியனையும், கம்யூனிஸ்ட் சீனாவையும் பாருங்கள். நாசிஸ்ட்களின் ஜெர்மனியிலும், பாசிஸ்ட்களின் இத்தாலியிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட சோவியத் யூனியனிலும், கம்யூனிஸ்ட் சீனாவிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். மார்க்சிஸ்டுகள் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் மக்களுக்கு நரகம்தான் கிடைத்தது.

1920களிலும் 1930களிலும் மார்க்சிஸம் முன்னோக்கி பாய முடியாமல் திணறியது. இதற்கு மதம், கல்வி அமைப்பு, கலை, ஊடகம் போன்றவைதான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த சாதனங்களை யெல்லாம் முதலாளித்துவ வாதிகள் கைப்பற்றி வைத்துள்ளனர். முதலாளிகளின் கைப்பாவைகளாக இவை யாவும் இயங்கி வருகின்றன. இவற்றை மாற்றினால்தான் புரட்சி சாத்தியமாகும் என்று இத்தாலியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவரும், சிந்தனையாளருமான அண்டோனியோ பிரான்சிஸ்கோ கிராம்ஸி கூறினார். ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரைச் சேர்ந்த மார்க்சிஸ்டுகளும் இதே தொனியில்தான் கருத்தை முன்வைத்தனர். இப்பிண்ணனியில் மாஸ் மீடியா எனப்படும் வெகுஜன ஊடகத்தைக் கைப்பற்றுவதில் மார்க்சிஸ்ட் கண்ணோட்டம் கொண்டவர்கள் முன்னெடுப்புகளை மேற்கொண்டனர். இந்த கலாச்சார ரீதியான ஊடுருவல், ஏற்கெனவே உள்ளவற்றை குப்பை என்று முத்திரை குத்தி புறந்தள்ள முற்பட்டது. அரசியல் செயல்திட்டத்தை கலாச்சார இனிப்பு மூலாம் பூசி மார்க்சிஸ்டுகள் முன் வைத்தனர். இது மிகவும் அபாயகரமான போக்காகும். சோவியத் யூனியன் உடைந்து சிதறிவிட்டது. சீனாவை கம்யூனிஸ்டு நாடு என்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் கம்யூனிஸ்டுகளால் கம்யூனிஸத்தை விற்பனை செய்ய முடியாது இக்கட்டான நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் புதிய பெயரில் மார்க்சிஸத்தை சந்தைப்படுத்துகிறார்கள். இதுதான் கல்ச்சுரல் மார்க்சிஸமாக மக்களிடையே விதைக்கப்படுகிறது.

கடந்தகால விழுமியங்களை அழித்துவிட்டு வெற்றிடத்தை உருவாக்கி அதன்மீது கலாச்சார மார்க்சிஸத்தை கட்டமைக்க கம்யூனிஸ்டுகள் துடிக்கிறார்கள். இதன் மற்றொரு பரிமாணம்தான் வோக்கிஸம் ஆகும். சமூக அநீதி, ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு எதிராகப் போராடுவதுதான் வோக்கிஸத்தின் அடிப்படைக் கோட்பாடு என்று கூறப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது மிகவும் ஈர்ப்புமிக்கதாக தோன்றுகிறது. ஆனால் இதை கம்யூனிஸ்டுகள் நடைமுறைப்படுத்தும் விதம் மிகவும் மோசமானது. பிற கலாச்சாரங்களை எல்லாம் ஒழித்துக் கட்டுவதுதான் வோக்கிஸத்தின் உள்பொருளாகும்.

`சினேக்ஸ் இன் கங்கா’ (கங்கையில் பாம்புகள்) என்ற புத்தகத்தில் ராஜுவ் மல்கோத்ராவும், விஜயா விஸ்வநாதனும் வோக்கிஸம் என்பது ஒருவகையான கிறிஸ்தவ மிஷனரிகளின் அணுகுமுறையைப் போன்றதுதான் என்பதை எடுத்துரைத்துள்ளனர். வோக்கிஸத்தில் எதிர்மறையான கருத்துகளுக்கு இடம் கிடையாது. மாற்றுக் கருத்து சொல்பவர்கள் தீர்த்துக் கட்டப்படுவார்கள். விக்கிபிடியாவிலேயே கல்ச்சுரல் மார்க்சிஸம் என்றால் சதிக்கோட்பாடு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்ச்சுரல் மார்க்சிஸ்ட்டுகள் கற்களையும், கம்புகளையும், வேறு ஆயுதங்களையும் பிரயோகிப்பது இல்லை. கருத்தியல் ரீதியான விஷமத்தனத்தை முதன்மைப்படுத்துகிறார்கள். இந்த ஆபத்து பாரதத்திலும் வலுக்கத் தொடங்கியுள்ளது.

நம் பாரதத்தின் அருட்கொடையான யோகாவை ஆன்மீகத்திலிருந்து விலக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிக்குப் பின்னணியின் உள்ளவர்கள் கலாச்சார மார்க்சிஸ்டுகளே. பாலியல் பிறழ்வுகளுக்கு ஆதரவு அளிக்கும் கலாச்சார மார்க்சிஸ்டுகள் நம் புராணங்களையும், இதிகாசங்களையும் துஷ்பிரயோகம் செய்யவும் முற்பட்டுள்ளனர். மகாபாரதத்தில் வரும் சிகண்டியை தவறான கோணத்தில் விமர்சிக்கிறார்கள். ஆண்டுதோறும் லட்சோபலட்சம் பக்தர்கள் தரிசிக்கும் சுவாமி ஐயப்பனையும் வக்ர பார்வையில் கலாச்சார மார்க்சிஸ்டுகள் வசைபாடுகிறார்கள். கலாச்சார மார்க்சிஸ்டுகளை வேரோடு வீழ்த்த வேண்டியது அவசியமானது.

பாரத விழுமியங்களுக்கு எதிராக செயல்படும் அவர்களை வீழ்த்துவதில் முனைப்பு காட்ட வேண்டும். டாக்டர் ஹெட்கேவார் தனிமனிதர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, பண்பாடுமிக்கவர்களாக செம்மைப்படுத்தி உயர்ந்தோங்க வைப்பதன் வாயிலாக பாரதத்தை எழுச்சியுற வைக்க முடியும் என்பதை சொல்லாக மட்டுமல்லாமல் செயலாகவும் நிரூபித்துக் காட்டினார்.

இதனால்தான் சர்சங்கச்சாலக் மோகன் பாகவத், விஜயதசமி உரையில், சனாதன எதிரிகளை வீழ்த்துவது குறித்து அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். சனாதன தர்மத்தைக் காக்க தேவி அகல்யாபாய் அரும்பாடுபட்டார். சிதைக்கப்பட்ட ஆலயங்களை அவர் மீண்டும் எழுப்பினார். பிரிட்டிஷ்காரர்களின் இறுக்கம் கரடியின் இறுக்கத்துக்கு ஒப்பானது. இதில் சிக்கியவர்கள் மீள முடியாது என்று தேவி அகல்யாபாய் கச்சிதமாக குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி தயானந்தர் தர்மத்தின் வழியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை எளிய நடையில் விளக்கினார். விஜயதசமி வெற்றித்திருநாள் புதிய முயற்சியைத் தொடங்குவதற்கு உகந்த நாள். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 100வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சுப வேளையில் அதர்மவாதிகளை வேரோடு வீழ்த்தி சனாதன தர்மத்தைக் காப்போம் என்று சங்கல்பம் ஏற்போம்.

கட்டுரையாளர்: உதவிப் பேராசிரியர்,
குருகிராம் பல்கலைக்கழகம்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து
தமிழில் : அடவி வணங்கி