ஹிந்து விரோதிகள் கடந்த சில நாட்களாகவே டாக்டர் அம்பேத்கருக்கு அவமரியாதை நடந்து விட்டதாக கூப்பாடு போடுகிறார்களே, காங்கிரஸ் கட்சியும், நாட்டின் முதல் பிரதமர் நேருவும் டாக்டர் அம்பேத்கருக்கு செய்த துரோகங்கள், பச்சை அவமதிப்பு ஆகியவை வெட்ட வெளிச்சத்திற்கு வருவதை அவர்களால் இனியும் தடுக்க முடியாது. இதோ சில சம்பவங்கள்:
டாக்டர் அம்பேத்கர் 1951 செப்டம்பரில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போது விடுத்த அறிக்கையில், தான் நேருவால் பாதிக்கப்பட்டதை விவரித்துள்ளார். வங்காளத்தின் ஜஸ்ஸோர், குல்னா, பாரிஸால், பரீத்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் 71 சதவீத ஹிந்துக்கள் இருந்தனர். இந்த பகுதியிலிருந்துதான் டாக்டர் அம்பேத்கர் (பாரத அரசியல் சாசனத்தை உருவாக்கிய) அரசியல் நிர்ணய சபைக்கு தேர்தெடுக்கப்பட்டார். பாரதத்துடன் இணைய வேண்டிய இந்த மாவட்டங்கள் அம்பேத்கரை தேர்ந்தெடுத்த மாவட்டங்கள் என்ற காரணத்திற்காகவே, பாகிஸ்தானுக்கு நேருவால் வழங்கப்பட்டது. என்ன ஒரு வக்கிரம்! இதன் காரணமாக அம்பேத்கரின் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் பதவி ரத்தானது. இது அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்த பச்சை துரோகம். ஜோகேந்திரநாத் மண்டல் என்னும் முக்கியமான வங்க தலித் தலைவர் முயற்சியின் காரணமாகத்தான் அரசியல் நிர்ணய சபைக்குள் டாக்டர் அம்பேத்கர் பிரவேசிக்க முடிந்தது.
அமைச்சர் பதவியை டாக்டர் அம்பேத்கர் ராஜினாமா செய்த போது முறைப்படி அவர் தன் அறிக்கை தாக்கல் செய்யக்கூட லோக்சபா தலைவர் அனுமதிக்க
வில்லை. அறிக்கையில் அவர் நேருவின் விபரீத தவறுகளை பட்டியலிட்டிருந்தார். அனுமதி மறுக்கப்பட்டது நேருவின் இச்சைப்படி. ராகுலின் கொள்ளுத் தாத்தாவுடைய ஜனநாயக தர்பார் லட்சணம் அப்படி!
ஆங்கிலேய அரசு பிரித்தாளும் சூழ்ச்சியின் அங்கமாக தலித்துகள், சீக்கியர்கள், இந்திய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என தனித் தொகுதிகள் அறிவித்தது. தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதிகளில் போட்டியிடவும், வாக்களிக்கவும் தலித் மக்களுக்கு மட்டுமே உரிமை என்பது பிரித்தாளும் சூழ்ச்ச்சியின் சிகரம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரவாடா சிறையில் காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார். 1932 செப்டம்பர் 24 அன்று காந்தி – அம்பேத்கர் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி தலித்துக்களுக்காக 147 க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மகிழ வேண்டிய காங்கிரஸ் கட்சியும், நேருவும் அம்பேத்கர் மீது இதனாலேயே வெறுப்பு கொண்டார்கள். காங்கிரஸ் கட்சியும், நேருவும் இதில் தலித்துக்களுக்கு அநீதி இழைத்ததை அம்பலப்படுத்த டாக்டர் அம்பேத்கர் மறக்கவில்லை.
இடைக்கால அரசாங்கம் 1946 ஆகஸ்டில் அமைக்கப்பட்டபோது “அரசாங்கத்திற்கு தகுதியற்றவன் என்று ஏற்கனவே நேருவால் விமர்சிக்கப்பட்டிருந்தேன்” என்கிறார் டாக்டர் அம்பேத்கர். அதாவது அவரை அமைச்சராக்க நேரு விரும்பவில்லை. நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் இல்லாதது சட்ட அமைச்சகம் என்று டாக்டர் அம்பேத்கர் உணர்ந்திருந்தார். எனினும் “யாருடைய நிர்பந்தத்தின் காரணமாக சட்ட அமைச்சராக நான் நியமிக்கப்பட்டேன் என புரியவில்லை” என்று சந்தேகம் எழுப்பினார் டாக்டர் அம்பேத்கர். வேறு யார்? காங்கிரசை கலைக்கச் சொன்ன காந்திதான்.
அம்பேத்கருக்கு நேரு இப்படியெல்லாம் துரோகம் இழைத்திருக்கிறார் என்பதை இன்றைய “தலித் போராளிகள்” தெரிந்துகொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சி, குறிப்பாக பிரதமர் நேரு, முஸ்லீம்களின் பாதுகாப்பில் காட்டிய அக்கறையை பட்டிலின சமூக மக்களுக்கு காட்டவில்லை. ‘‘பிரதமரின் முழு நேரமும் கவனமும் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. ஆனால் நான் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால், முஸ்லிம்களுக்கு மட்டும் பாதுகாப்பு தேவையா? பட்டியல் சமூக, பழங்குடியினர், இந்திய கிறிஸ்தவர்கள் என மற்ற பிரிவினருக்கு பாதுகாப்பு தேவை இல்லையா?” என தனது கடிதத்தில் அம்பேத்கர் வினவியுள்ளார்.
டாக்டர் அம்பேத்கர் 1952-ல் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மும்பை லோக் சபா தொகுதியில் டாக்டர் அம்பேத்கரை தோற்கடித்த நாராயண் சதோபா கஜ்ரோல்கர் என்கிற காங்கிரஸ்காரருக்கு பத்ம பூஷண் விருது வழங்கியது. வன்மத்தின் எல்லை! இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பாந்த்ராவில் போட்டியிட்ட டாக்டர் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி மீண்டும் தோற்கடித்தது.
அமைச்சர் பதவியை டக்டர் அம்பேத்கர் 1951ல் ராஜினாமா செய்த பின்னர், 1952 ஜனவரி 16 அன்று எட்வினா மவுண்ட்பேட்டனுக்கு நேரு எழுதிய கடிதத்தில், அம்பேத்கர் ஹிந்து வகுப்புவாதிகளுடன் இணைந்துள்ளார் என்றும் இதன் காரணமாகவே அவர் அமைச்சர் பதவிலிருந்து விலகிக் கொண்டார் என்றும் பேசுகிறார். அந்தக் கடிதத்தில் டாக்டர் அம்பேத்கர் தன் விரோதி என குறிப்பிட்டுள்ளார் நேரு. டாக்டர் அம்பேத்கரால் நேருவுக்கு ஏற்பட்ட பதட்டத்தை இது காட்டுகிறது.
‘முதல்வர்களுக்குக் கடிதங்கள்’ என்ற நேருவின் புத்தகத்தில், ஜூன் 18, 1959 தேதியிட்ட கடிதம் குறிப்பிடத்தக்கது. ‘அம்பேத்கருக்கு அவர் பிறந்த இடமான மோவ்வில் நினைவிடம் அமைக்க வேண்டும்’ என்று பம்பாய் மேயர் கோரிய கடிதத்திற்கு நேரு இப்படி அளித்த பதில் அது: “அரசாங்கம் நினைவிடங்கள் அமைப்பது வழக்கம் அல்ல. நினைவுச் சின்னத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் முன்னணியில் இருப்பது ஒரு அசாதாரணமான பிறழ்வு”. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் நேரு, இந்திரா, ராஜீவ் போன்றவர்களுக்கு மானாவாரியாக நினைவு சின்னங்கள் அமைத்தது அரசின் சார்பில் என்பதை நினைத்து தேசம் கைகொட்டிச் சிரிக்கிறது.
கட்டுரையாளர் : எழுத்தாளர்