அட்டைப்படக் கட்டுரை / பின்னணி – ஐஸ்கிரீம்: தமிழகப் பெற்றோரின் கொதிக்கும் கேள்விகள்

பாரத நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களை ஒரு கை பார்க்கிற காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன.

பதஞ்சலி நிறுவனம் சந்தையில் கால் பதித்த முகூர்த்தம், அழகு சாதனப் பொருள்களை பாரதத்தில் குவித்துக் கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்களான கால்கேட், புராக்டர் அண்டு கேம்பிள் போன்றவற்றுக்கு உதறலெடுக்கத் தொடங்கியது. இன்னும் 5 ஆண்டுகளில் கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை பாரதத்திலிருந்து அடியோடு காலி செய்து விடுவேன்” என்று 2017 ஏப்ரலில் பிரகடனம் செய்திருக்கிறார் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ்.

அதே பாணியில் இப்போது போர் முரசு கொட்டுகிறது அமுல். ஹிந்துஸ்தான் யூனிலீவர் நீதிமன்றத்தை தஞ்சம் அடைந்து தனது உற்பத்திப் பொருள் என்று வாதாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது! (விவரம் கட்டுரையில்).

வர்த்தக வில்லங்கம் ஒரு புறமிருக்க ஐஸ்கிரீமை நாடி ஓடும் குழந்தைகளுக்கு அமுல் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பதா, யூனிலீவரின் உற்பத்திப் பண்டத்தை வாங்கிக் கொடுப்பதா என்று தமிழகப் பெற்றோர்கள் திகைக்கிறார்கள். விஷயம் குழந்தைகளின் உடல்நலம் பற்றியதாயிற்றே?

தமிழகத்தில் யூனிலீவரின் ‘குவாலிட்டி’ பண்டங்கள் கிடைக்கின்றன. அமுல் இப்போதுதான் இங்கே கடை விரிக்கத் தொடங்கியுள்ளது. கிடைக்கிற விதேசியா, கிடைக்காத சுதேசியா? இதுதான் பிரச்சினை.

இதற்கிடையில் தமிழக முதல்வரின் தொகுதியில் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்ய ரூ.10 கோடியில் திட்டம் தயார் என்று சட்டப்பேரவையில் மேள தாளத்தோடு அறிவிப்பு போன வாரம் வெளியானது. அங்கே உற்பத்தியாகும் ஐஸ்கிரீம் ‘அமுல்’ சொல்லிக் கொள்வது போல சுத்தமான பால் பொருளாக இருக்குமா அல்லது ‘குவாலிட்டி’ வகையறா போல கொழுப்புக் கட்டியாக இருக்குமா? தவிக்கும் பெற்றோருக்கு யார் விளக்கம் தரப்போகிறார்கள்?

மாநில அரசு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்தாலும் அது நீடித்து நடக்குமா அல்லது அடித்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கும் அம்மா உணவகத்தின் கதி தானா? (சென்னை மாநகராட்சி அம்மா உணவகத்திற்கு செலவு செய்வது கட்டுபடி ஆகாமல் 400 உணவகங்களை  200 ஆக்கிவிட முயன்று வருகிறது!)

அமுல் கிளப்பிய ஐஸ்கிரீம் சர்ச்சையின் மிக முக்கிய அம்சம் நுகர்வோர் பாதுகாப்பு. குறிப்பாக நுகர்வோர் உடல்நலம் பாதுகாப்பு. யூனிலீவர் வகையறாக்கள் உற்பத்தி செய்து குவிக்கும் ஐஸ்கிரீம்களில் உள்ள கொழுப்பால் எந்தெந்த வயதினருக்கு என்னென்ன பாதிப்பு? ‘இது சிறு குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது’ என்று கோக கோலா அறிவிக்கிறதே, அது போல ஐஸ்கிரீம் வேஷத்தில் வருடம் கொழுப்புக்கட்டி பூதனைகளை அறிவிக்கச் செய்ய முடியுமா?

பொதுவாக வீடுகளில் ‘ஐஸ்கிரீம் அதிகம் சாப்பிடாதே சளி பிடிக்கும்’ என்றுதான் பெற்றோர் பிள்ளைகளை எச்சரிப்பார்கள்.

இப்போது தமிழகப் பெற்றோருக்கு கிலி பிடித்திருக்கிறது.

கடைவீதியிலோ அமுல் இல்லாததால் யூனிலீவர் வகையறாவின் கொழுப்புக் கட்டிகளை பிள்ளைகள் உறிஞ்சித் தீர்ப்பது தொடர்கிறது!