பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குழந்தைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் குடிமைப் பணியில் 30 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் நடைமுறை சரியானதுதான் என்று ஜூன் மாதம் 5ம் தேதி பங்களாதேஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதற்கு அடுத்த நாள் அதாவது ஜூன் 6 அன்று ஜமாத் − இ − இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பின் மாணவர் அணியைச் சேர்ந்தவர்கள் தங்களின் எதிர்ப்பை கொடூரமாக வெளிப்படுத்தினார்கள். எதிர்ப்பு உக்கிரமடைந்தது. சாலைகளை மறித்தார்கள். காவல் நிலையங்களை முற்றுகையிட்டார்கள். டாக்கா பல்கலைக்கழகம், ஜகந்நாத் பல்கலைக்கழகம், ஷெ − இ − பங்களா வேளாண் பல்கலைக்கழகம், ராஜ்சாஹி பல்கலைக்கழகம், சிட்டகாங் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
போராட்டம் தொடங்கிய காரணம்
பல்கலைக்கழகங்கள் போர்க்களங்களாக மாறின. இப்பின்னணியில் சீனா, பாகிஸ்தான், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பாரதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தூண்டி விட்டனர். பங்களாதேஷில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டதற்கு இதுதான் மூலகாரணம். இதன் உச்சமாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா விரட்டியடிக்கப்பட்டார். அவர் பாரதத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இதன்பிறகு ஹிந்துக்கள் மீதான தாக்குதல் மேலும் உக்கிரமடைந்து விட்டது. இதை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஹந்துக்களுக்கு எதிராக
போராட்டம் மாறியது
ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது உடைமைகள் சூறையாடப்பட்டுள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹிந்துப் பெண்கள் பாலியல் ரீதியிலான துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மனித நாகரீகத்துக்கு புறம்பான அத்தனை நடவடிக்கைகளும் சிறுபான்மையினருக்கு எதிராக பங்களாதேஷில் உச்சம் பெற்றுள்ளன. முகம்மது யூனுஸ் தலைமையிலான தற்காலிக அரசு பங்களாதேஷில் பொறுப்பேற்றுள்ளது.
முஸ்லிம் பயங்கரவாதம்
பங்களாதேஷில் அதிகாரரீதியான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை மூன்று அமைப்புகள் பயன்படுத்திக் கொண்டுள்ளன. முதலாவதாக பங்களாதேஷ் தேசிய கட்சி அரசியல் ரீதியான தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி உள்ளது. சிறு வணிகர்கள் உள்ளிட்ட பிரிவினரிடையே இந்தக் கட்சிக்கு அதிகளவில் ஆதரவு உள்ளது.
ஜமாத் − இ − இஸ்லாமி என்ற தீவிரவாத அரசியல்கட்சி. பங்களாதேஷ் நிர்வாகத்தை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ஹிஸ்புல் தாஹீர் என்ற தீவிரவாத அமைப்பு பங்களாதேஷில் காலிப் எனப்படும் இஸ்லாமிய சர்வாதிகாரம் பொருந்திய ஆட்சியை நிலைநாட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
ஹிந்து விரோத யூனுஸ்
முகம்மது யூனுஸ் ஆலோசகராக அங்கம் வகிக்கும் இடைக்கால அரசு மனித உரிமைகளை நிலைநாட்டப் போவதாகக் கூறியுள்ளது. பேச்சுரிமையும், எழுத்துரிமையும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு முற்றிலும் மாறான செயல்களே பங்களாதேஷில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசியல் எதிரிகள் வேட்டையாடப்படுகிறார்கள். அதிகாரிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வழக்குரைஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை. அச்சம் எங்கும் வியாபித்துள்ளது.
அரசியல் பழி தீர்ப்பு
முன்னாள் சட்ட அமைச்சர் ஹனீசுல் ஹக் பிரதமரின் முன்னாள் ஆலோசகர் சல்மான் ரகுமான், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜஹான் கான், முன்னாள் அமைச்சரும் அவாமி லீக் இணைப் பொதுச்செயலாருமான திப்பு மோனி, முன்னாள் உள்துறை இணையமைச்சரும், துணை சபாநாயகருமான சம்ஷுல் ஹக், முன்னாள் வர்த்தக அமைச்சர் திப்பு முன்ஷி, முன்னாள் உணவுத்துறை அமைச்சர் சதன் சந்திர மஜும் தார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா.வுக்கு கல்தா
இஸ்கான் துறவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்திய இஸ்கான் துறவி சின்மாய் கிருஷ்ணதாஸ் தேசதுரோக குற்றச்சாட்டின் பேரில் சிறைப் படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு வருகிறார். பங்களாதேஷில் மனித உரிமைகள் அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்று ஐ.நா. சபை தெரிவித்தபோது பங்களாதேஷ் இடைக்கால அரசு பொய் சாக்கு கூறிவிட்டது. முரண்பாடானவற்றை தெரிவித்து வருகிறது. இதுகுறித்து பரிசீலித்து வருகிறோம் என்று நழுவி விட்டது. இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று வெளிவிவகாரத்துறை ஆலோசகர் தெளஹித் உசேன் மழுப்பி விட்டார்.
பயங்கரவாதிகளை விடுதலை செய்த அரசு
பங்களாதேஷில் இஸ்லாமிய தீவிரவாதம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நீதிமன்றங்களும் இடைக்கால அரசின் இசைவுக்கு ஏற்ப செயல்படுகின்றன. ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி ஏறத்தாழ அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்பான ஹன்ஸாருல்லா பங்களா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் முப்தி ஜஸிமுதீனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. சமூக ஊடகங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள். பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சீனாவின் ஆதிக்கம் மேலும் மேலும் வலுத்து வருகிறது. ஹிந்து கோயில்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன. விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளன. கோயில் பூசாரிகள் அடித்து உதைக்கப்பட்டுள்ளனர்.
ஹிந்து கடவுள் சிலைகள் சேதம்
பங்களாதேஷின் பிரபல நாளிதழான ‘புரோத்தோம் அலோ’ அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்தது. இந்த தகவல் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியான இதழில் இடம்பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான காலத்தில் 1,492 ஹிந்து கடவுளின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன என்பதுதான் அந்த திடுக்கிட வைக்கும் தகவலாகும். எல்லா இடங்களிலும் இது வரைமுறையின்றி அரங்கேறியுள்ளது. குல்நாவில் 479, டாக்காவில் 273, சாட்டோ கிராமில் 204, ராஜ்சாஹியில் 166, ரன்பூரில் 129, பரிஷாலில் 100 என அட்டூழியப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
ஹிந்துக்கள் வேலை பறிக்கப்பட்டது
ஆயிரக்கணக்கான ஹிந்து ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேறு பணிகளில் இருந்த ஹிந்துக்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டுள்ளது. ஹிந்துக்கள் மீதான கொடூர நடவடிக்கைகள் எல்லை மீறிச் சென்று கொண்டே இருக்கின்றன. ஜனநாயக வழியில் தங்களது தற்காப்பை மையப்படுத்தி எதிர்ப்பை தெரிவிக்கக்கூட பங்களாதேஷில் உள்ள ஹிந்துக்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் வேண்டுகோள்
துர்கா பூஜையை ஒட்டியே 50 சதவீதத்துக்கும் அதிகமான வன்முறை வெறியாற்றம் அரங்கேறி உள்ளது. ஊடகங்களில் உண்மையான செய்திகளை வெளியிட முடியவில்லை. ஹிந்து மதத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் உண்மையான தகவல்களை பதிவு செய்ய முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர்களது பணிக்கு உத்திரவாதமும் இல்லை. இஸ்கான் துறவி சின்மாய் கிருஷ்ணதாஸை விடுதலை செய்ய வேண்டும். ஹிந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் பங்களாதேஷ் அரசை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கேட்டுக் கொள்கிறது.
எதிரி பாகிஸ்தானோடு கூட்டு
பங்களாதேஷ் மீண்டும் கிழக்குப் பாகிஸ்தானாக மாறி வருகிறது என்ற தோற்றம் வலுவடைந்து வருகிறது. 1971ம் ஆண்டுக்குப் பிறகு இவ்வருடம் நவம்பர் 11ம் தேதி பாகிஸ்தான் சரக்கு கப்பல் நேரடியாக பங்களாதேஷுக்குச் சென்றுள்ளது. பாகிஸ்தான் முதலீடு பங்களாதேஷில் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பாரதத்திலிருந்து வடகிழக்குப் பகுதியை பிரித்து விட வேண்டும் என்ற முன்னெடுப்பையும் நாசகார சக்திகள் மேற்கொண்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டியது அவசியமானது மட்டுமல்ல, அவசரமானதும் கூட.
அகில பாரத ஆர்.எஸ்.எஸ்
பொதுச் செயலாளர் அறிக்கையிலிருந்து
தமிழில் : அடவி வணங்கி