அஞ்சல் துறையில் புதிய வசதி

மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்னணு சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது. மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சேவைகள் கிடைப்பது மட்டுமின்றி, ஊழியர்களுக்கு பணிச் சுமையை குறைக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில், அஞ்சல் துறையில் தற்போது மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்காக யு.பி.ஐ, கியூ.ஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகர அஞ்சல் மண்டலத்துக்கு உட்பட்ட 20 தலைமை அஞ்சல் நிலையங்கள், 545 துணை அஞ்சலகங்களிலும் கடந்த ஏப்ரல் முதல் இந்த சேவை அறிமுகமானது. முதல்கட்டமாக, உள்நாடு, வெளிநாடுகளுக்கு அனுப்பும் பதிவு தபால்கள், விரைவு தபால்கள், பார்சல்களுக்கு யு.பி.ஐ, கியூ.ஆர் கோடு மூலம் பணம் செலுத்தலாம். இதன்மூலமாக தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கடந்த 19ம்தேதி வரை 12,208 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளை அஞ்சலகங்களில் இது சோதனை கட்டத்தில் உள்ளது. சோதனை முடிந்ததும் விரைவில் அங்கும் அமல்படுத்தப்படும். அடுத்தகட்டமாக, சேமிப்பு கணக்கு, தொடர் வைப்புக் கணக்கு, மணியார்டர் உள்ளிட்ட மற்ற சேவைகளுக்கும் யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தும் வசதி படிப்படியாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.