அஞ்சனாத்ரி மலை மேம்பாடு

கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஹனுமான் பிறந்த இடமாக கருதப்படும் அஞ்சனாத்ரி மலையை ரூ.140 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகளை ஆளும் கர்நாடக அரசு விரைவில் தொடங்க உள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அஞ்சனாத்ரி மலையில் அறுநூறு குடியிருப்புகள், வாகன நிறுத்துமிடம், தகவல் மையம் ஆகியவையும் அமைக்கப்படும். மேலும், தற்போது பின்தங்கிய மாவட்டமாக அறியப்படும் இங்கு பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை நிறுவி மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, விமான நிலைய இணைப்பு திட்டங்கள் ஆகியவற்றையும் செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. சமீப காலமாக, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை ஆகியவை ஹனுமன் பிறந்த இடம் தங்கள் பகுதிதான் என சொந்தம் கொண்டாடிவரும் பின்னணியில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக கர்நாடகாவில் உள்ள அஞ்சனாத்ரி மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர், இதுதான் ஹனுமான் பிறந்த இடம் என்று நம்புகிறார்கள். பல வரலாற்றாசிரியர்களும் கர்நாடகப் பகுதியின் அஞ்சனாத்ரி மலையை ஹனுமன் பிறப்பிடமாகக் குறிப்பிடும் பல குறிப்புகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.