அசாமில் ஹிஸ்புல் முஜாகிதீன் குற்றவாளி

அசாமில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் பிரிவை உருவாக்குவது தொடர்பான சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சைதுல் ஆலம் என்ற பயங்கரவாதிக்கு கௌஹாத்தி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முன்னதாக, இவ்வழக்கில், 11 மார்ச் 2019 அன்று என்.ஐ.ஏவால் தாக்கப் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், ஷாநவாஸ் ஆலம் மற்றும் உமர் பரூல் ஆகிய இருவர் என்.ஐ.ஏ நீதிமன்றத்தால் 23 டிசம்பர் 2022 அன்று குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட இந்த மூவரும் அசாமில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பிரிவை நிறுவுவதற்காக கம்ருஜ் ஜமான் என்ற நவருடன் சேர்ந்து சதி செய்ததாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்தது. இவர்கள், 2017 மற்றும் 2018ம் ஆண்டில், ஜமுனாமுக் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள மிலோன்பூர் மஸ்ஜித், இஸ்லாம்பூர் மஸ்ஜித் மற்றும் சோல்மாரி மஸ்ஜித் போன்ற பல்வேறு மசூதிகளில் தொடர் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தீவிர அடிப்படைவாத சித்தாந்தத்தைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டன. அதில், ஜிஹாத் பற்றிய பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன. இளைஞர்கள் இந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டனர். இதற்கு ஏதுவாக ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை அசாமில் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று மூளைசலவை செய்யப்பட்டது. மேலும், கம்ரூஜ், ஷாநவாஸ் மற்றும் உமர் ஆகியோர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வாங்குவதற்கு நிதி திரட்ட சதி செய்தனர். உமர், மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட ஜெயனால் உதினுடன் சேர்ந்து தளவாட ஆதரவுகளை சேகரித்தார். தங்கள் தகவல் தொடர்புகளை ரகசியமாக வைத்திருக்க இவர்கள், தங்களது அலைபேசிகளில் Blackberry messenger (BBM) செயலியை நிறுவி பயன்படுத்தினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்க இந்த செயலியைப் பயன்படுத்தினர். மேலும் தசரா தினத்தன்று, லும்டிங் மற்றும் ஹோஜாய் ஆகிய முஸ்லீம் அல்லாத பகுதிகளில் உள்ள அப்பாவி பொதுமக்கள் மீது குண்டுவெடிப்பு மற்றும் ஆயுதமேந்திய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட சதி செய்தனர்.இந்த தாக்குதல்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கவும் திட்டமிட்டிருந்தனர் என்பது இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது.