அகநோக்கையும் புறப்பார்வையையும் மாதவ் நேத்ராலயா பிரதிபலிக்கிறது

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் 30ம் தேதி நாகபுரிக்கு வருகை தந்தார். ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவார், 2வது சர்சங்கசாலக் குருஜி கோல்வல்கர் ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பாகவத், முன்னாள் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டாக்டர் அம்பேத்கர் பெளத்த மதத்தில் சங்கமித்த தீக்ஷா பூமிக்கும் பிரதமர் மோடி சென்று மரியாதை செலுத்தினார். இதையடுத்து மாதவ் நேத்ராலயா அறக்கட்டளை நடத்திவரும் மாதவ் நேத்ராலயா மருத்துவமனையின் விரிவாக்கத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது 250 படுக்கை வசதிகளை கொண்டிருக்கும். இதில் 14 அறுவை சிகிச்சை அரங்கங்களும், 14 ஆய்வு மையங்களும் இடம் பெற்றிருக்கும். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பாகவத், ஜூனா அகடாவின் மகாமண்டலேஷ்வர் ஆச்சார்ய சுவாமி அபிதேஷ் ஆனந்த் கிரி மகாராஜ், ஆச்சார்ய மகரிஷி வேதவியாஸ் பிரதிஷ்டானைச் சேர்ந்த சுவாமி கோவிந்தேவ் கிரி மகாராஜ், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மாதவ் நேத்ராலயாவைச் சேர்ந்த டாக்டர் அவிநாஷ் சந்திர அக்னி ஹோத்ரி ஆகியோர் மேடையில் பிரசன்னமாகியிருந்தார்கள்.

பிரதமர் மோடி மாதவ் நேத்ராலயா விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டி பேசினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: மாதவ் நேத்ராலயாவில் பார்வை பற்றி பேசுவது இயல்பானது. பார்வை, வாழ்க்கைக்கு திசை காட்டுகிறது. நாம் நூற்றாண்டு காலம் தீர்க்கமான பார்வையுடன் வாழ வேண்டும் என்பதற்கான வழிமுறை வேதங்களில் கூறப்பட்டுள்ளது. இது புறப்பார்வையுடன் நின்று விடக்கூடாது. அகநோக்கையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இன்று குடிபடவா, யுகாதி என்ற பெயர்களில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. நமக்கு உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கின்ற டாக்டர் ஜியின் பிறந்த நாளும் அதுதான். ஆர்.எஸ்.எஸ் இவ்வருடம் நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த மகத்தான தருணத்தில் இங்கு வருகை தரவும், டாக்டர் ஜி, குருஜி ஆகியோருக்கு மரியாதை செலுத்தவும் பாக்கியம் கிடைத்துள்ளதை பெரும் பேறாகக் கருதுகிறேன்.

டெல்லி செங்கோட்டையில் உரையாற்றியபோது, நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து எடுத்துரைத்துள்ளேன். ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜன ஒளஷாதி கேந்திரங்களில் நடுத்தர வகுப்பினரும், ஏழை எளிய மக்களும் பயனடையக் கூடிய வகையில் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. நாடுமுழுவதும் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவசமாக டயலிஸிஸ் சேவை அளிக்கப்படுகிறது.

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளோம். எய்ம்ஸ்களின் எண்ணிக்கையையும் உயர்த்தியுள்ளோம். முதல் முறையாக தாய்மொழியில் மருத்துவக் கல்வியை கற்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்போது சர்வதேச அளவில் யோகாவும், ஆயுர்வேதமும் தொடர்ந்து அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நம்மை வந்தேறிகள் அடிமைப்படுத்தினார்கள் என்பதை முழுமையான உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் நமது கலாச்சாரத்தை வந்தேறிகளால் அழித்தொழிக்க முடியவில்லை. கனல், சுடர் விட்டுக் கொண்டே இருந்தது. மிகவும் இக்கட்டான வேளைகளில் கூட புதிய சமூக இயக்கங்கள் தோன்றின. மகான்கள் அவதரித்தார்கள். நல்வழி காட்டினார்கள். பக்தி இயக்கம் திருப்பு முனையை ஏற்படுத்தியது. குருநானக், கபீர், துளசி தாஸ், சூர்தாஸ், துக்காராம், ராம்தேவ், தியானேஸ்வர் ஆகியோர்  நமது தர்மத்திற்கு நல்கியுள்ள பங்களிப்பு அளப்பரியது. அடிமை தளைகளை அறுத்திட இந்த மகான்கள் அயாரது பாடுபட்டனர்.

மகாராஷ்ட்ராவில் உள்ள விதர்ப்பாவில் குலாப் ராவ் மகாராஜ் என்ற மகான் வாழ்ந்தார். அவருக்கு புறப்பார்வை கிடையாது. சிறுவயதிலேயே பார்வைத் திறனை அவர் இழந்து விட்டார். எனினும் அவரது அகச்சுடர் சற்றும் குன்றவில்லை. இதனால்தான் அவரால் பக்தி பாடல்களை இயற்ற முடிந்தது. பார்வையளிப்பதில் மாதவ் நேத்ராலயா ஆற்றிவரும் சேவை முன்னுதாரணமாக உளள்து. ஒவ்வொரு ஸ்வயம்சேவகரும் தன்னலமற்ற சேவையையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ளார். இந்த சேவைக் கனல் ஒருபோதும் தணிவதில்லை. சங்கம் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ள பேரொளி என்று குருஜி குறிப்பிட்டது சாலப் பொருத்தமே. நாம் இருட்டை விலக்க வேண்டும். சுடரை ஏற்ற வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், “ஷாகாக்களில் தினந்தோறும் ஒரு மணி நேரம் பங்கேற்பதன் வாயிலாக ஸ்வயம்சேவகர்கள் புத்துணர்ச்சி பெருகிறார்கள். நாடு முழுவதும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சேவா காரியங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவம், விழுமியத்தை வழங்குகிறது. விழுமியத்தின் பயனாக கனிகள் கிடைக்கின்றன. இந்த கனிகளை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். இதுதான் சங்கத்தின் கோட்பாடு. இது பாரதத்தை உயர்ந்தோங்க வைக்க உறுதுணையாக உள்ளது’’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி