மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் ‘ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரைடர் பைக் பேரணியை’ கொடியசைத்து தொடங்கி வைத்தார். மத்திய இணையமைச்சர்கள் நிஷித் பிரமானிக், மீனாட்சிலேகி உட்பட பலர் இதில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமித் ஷா,“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு விடுதலையின் அமிர்தப்பெருவிழாவை கொண்டாடுகிறது. இந்த அமிர்த பெருவிழா, சுதந்திரத்துடன் நம்மை தொடர்புபடுத்துவதுடன், அதை பல பரிமாணங்களாகவும் மாற்றியுள்ளது. இது மோடியின் புதிய மற்றும் பல பரிமாண சிந்தனையை காட்டுகிறது. அமிர்த பெருவிழா மக்களிடம் கொண்டு செல்வதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். அமிர்தப் பெருவிழாவையொட்டி பிரதமர் மூன்று இலக்குகளை நிர்ணயித்திருந்தார். முதலாவதாக, புதிய தலைமுறை, இளைஞர்கள், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு நீண்ட, கடினமான சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், உயிர்நீத்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை அறிமுகப்படுத்துவது. இரண்டாவதாக 75 ஆண்டுகளில் நமது நாடு செய்த சாதனைகளைப் பற்றிய பெருமித உணர்வை ஏற்படுத்தப்பட வேண்டும். மூன்றாவதாக, 2047ல் நாம் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்போது அடைய வேண்டிய இலக்குகளைத் தீர்மானிக்க வேண்டும். மேலும் பாரதம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கான பயணத்தின் பாதையை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இன்று, இதன் ஒரு பகுதியாக, 10 பெண்கள் உட்பட 120 பேர், 75 மோட்டார் சைக்கிள்களில் 75 நாட்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள், 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வழியாக ஆறு சர்வதேச எல்லைகள் உட்பட 250க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று 75 நாட்களில் 18,000 கி.மீ தூரம் பயணித்து, அமிர்தப்பெருவிழாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக 75 முக்கிய இடங்களுக்கு சென்று, அதன் பின்னர் தேசிய தலைநகருக்குத் திரும்புகிறார்கள்” என்றார்.