கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் அளித்த தீர்ப்பைக் கண்டித்து தமிழகத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மதுரை கோரிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், ரஹமத்துல்லா என்பவர் உயர் நீதிமன்ற நீதிபதிகளை மிரட்டும் வகையில் பேசினார். இது தொடர்பாக மதுரை அசன்பாஷா, அபிபுல்லா உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அசன்பாட்ஷா, அபிபுல்லா ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஹிஜாப் தீர்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளை மிரட்டிய வழக்கில் அல்மாலிக் பைசல் நைனா, தவ்பீக், செய்யது நைனா, யாசர், அப்பாஸ், சீனி உமர் கர்த்தர், அல்டாப் உசேன் ஆகியோரும் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, ‘எதிர்காலத்தில் இதுபோன்று பேச மாட்டோம்’ என மனுதாரர்கள் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில், ‘இனிமேல் இப்படி பேசமாட்டோம்’ என தனித்தனியாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த விசாரணையை ஜூன் 29க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.