சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் ‘ஹரிவராசனம்’ பாடல் இயற்றப்பட்ட நுாற்றாண்டு விழா நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. அதற்காக 21 மாநில பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக தென் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் வட மாவட்ட பொறுப்பாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அறிமுக கூட்டம் சென்னை கோடம்பாக்கம் ஐயப்பன் கோயிலில் நடைபெற்றது. அதில், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் மாநில தலைவராகவும் திரைப்பட இயக்குனர் பேரரசு செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து, பாடகர் உன்னிகிருஷ்ணன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட 35 பேர் துணை தலைவர்களாகவும்; பாடகி சுசித்ரா, நடிகை ஆர்த்தி பெப்சி சிவா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் செயலர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் பேசிய சாஸ்திராலயாவின் சுவாமி பிரம்ம யோகானந்தர், “உலகில் உள்ள மதங்களுக்கெல்லாம் தாய் மதமாக ஹிந்து மதம் உள்ளது. மற்ற மதங்களில் நூறாண்டுகள் ஆண்டுகள் என்பதே பெரும் விஷயமாக உள்ளது. ஆனால், ஹிந்து மதத்தில் ஆன்மிகப் பெரியவர்களின் அவதார திருநாள் ஆயிரம் ஆண்டுகளை கொண்டாடுவதும் கோயில்களுக்கு ஆயிரம் ஆண்டு விழா எடுப்பதும் சாதாரணம். சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஹிந்து மத பெருமைகளை எடுத்துச் சொல்லியே நுாறாண்டுகள் ஆகின்றன. ‘ஹரிவராசனம்’ பாடல் இயற்றப்பட்டும் நூறாண்டுகள் ஆகிறது. அப்பாடல் நாட்டின் ஒற்றுமையையும் ஹிந்து மதத்தின் உயர்ந்த எண்ணங்களையும் விதைக்கும் பாடலாக உள்ளது. இதுபோன்ற பாடல்கள் விதைக்கும் ஒற்றுமை உணர்வுடன் அனைவரும் உழைத்தால் நாடு விரைவில் வல்லரசாகும்” என்றார்.