வேரைத் துறக்குமோ விருட்சங்கள்

அயல் நாட்டில் கற்றவை, பெற்றவை- நல்ல அனுபவங்கள், உதவிக் கரங்கள், நட்புகள்  …

அந்த நாட்டின் யதார்த்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அங்கே, அவரவர் தத்தம் பணிகளைக் கவனித்துக் கொள்வதற்கே சரியாயிருக்கும் அங்கே அக்கம் பக்கம் யாரிடம் பண உதவி கேட்டுப் பெற முடியாது. உழைப்பின் மூலம் வரும் நிறைய வரியை கட்டுவதின் மூலம் பிள்ளைகளுக்கு கல்வி இலவசம், மருத்துவ வசதி இலவசம் எல்லாவற்றிற்கும் அரசாங்கம் தான் பொறுப்பேற்கிறது.

கனடா வாழ்க்கை நிறைய அனுபவங்களை அள்ளி தந்ததில்  சுற்றுப்புற சூழல்  பராமரிப்பு, திட்டமிட்டு செலவிடுதல்,   சேவை மனப்பான்மையோடு வாழ்வது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.. பிரெஞ்சு பள்ளிக்கூடத்தில் படித்த தோழி (போஸ்னியா நாட்டவள் ) பள்ளிக்கூட விடுமுறையின் போது ஸ்ட்ராபெர்ரி தோட்டம் சென்று பழம் பறித்துக் கொடுத்தால்  பணம் பண்ணலாம் என்று வற்புறுத்தியதால் அவளோடு சென்றேன். அன்று வேலை பார்த்தவர்களுள்  நான் தான் மிகக் குறைவாக சம்பளம் பெற்றேன். பிறகு யோசித்துப் பார்த்துப் புரிந்து கொண்டேன், சிறியதோ பெரியதோ எந்த லையாயிருந்தாலும் அதன் சூட்சுமத்தைப் புரிந்து வேலை செய்தால் வெற்றி பெறமுடியும் என்று.

அன்று முதல் எங்கெல்லாம் வேலை கிடைக்கிறதோ, நானும் தோழியும் சேர்ந்து செல்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டோம். ஆரம்ப கட்டத்தில் ஒரு தொழிலகத்தில் கார்பெட் (தர  விரிப்பு) ஓரம் அடிக்க ஆளே இல்லை என்று கேள்விப்பட்டு என் தோழி உடனே அவர்களோடு தொடர்பு கொண்டு எனக்கும் சேர்த்து விண்ணப்பித்தது மறக்கமுடியாது நேர்முகக்காணலில் என் தற்குறிப்பு படிவத்தில் (Resume) அவர்கள் கேட்ட தையல் அனுபவம் சம்பந்தபட்ட சான்றிதழும்   இல்லை, அனுபவமும் குறிப்பிடவும் இல்லாத என்னை பார்த்து முறைத்து எதை வைத்து இங்கே வேலை கேட்க வந்தாய் என்று கேட்டார். தோழிக்காக என்று சொல்லி அவளை மாட்டிவிட விரும்பவில்லை.  கொடுங்கள், முயற்சிக்கிறேன். பிறகு முடிவு உங்களது என்றேன். சேர்ந்த இரு நாளில் மெஷினை செயல்படுத்துவதை கற்றுக் கொண்டு,  பிறகு தைக்கும் பணியில் ஈடுபட்டோம். ஒரு வார கெடு முடிந்தது. வந்து சொன்னார்:” இதற்கு முன் வேலை பார்த்தவள் ஒரு மணி நேரத்திற்கு 30 கார்பெட் தைத்தாள். ஆனால் நீயோ ஐம்பது வரை..”  அதைக் கேட்டு இன்னும் வேகம் கூடியது.  நிரந்தரப் பணியாளர் வராத சமயத்தில் பிரின்டிங் பிரிவில் இணைத்தார்கள்.  அந்தப் பணியில் கணினி வழி  டிசைன் அனுபவம்  நிரம்பத் தேவைப்பட்டது. முனைந்து கற்றுக்கொண்டதால் அங்கேயம்  என் வேலையைப்   பார்த்து, ” நீயே தொடரலாம் ” என்று ஊக்கப் படுத்தினார். நான் ஆங்கிலம் பேசுவேன் என்று அறிந்து, தொலைபேசியில் பேச வைத்து, அதை பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்து  அந்த வேலையும் சேர்த்து கொண்டு மொத்தமாக எல்லா வேலைகளையும் எளிதில் கற்றுக் கொள்ளும்படி இருந்ததின் காரணம் என் மீது கொண்ட நம்பிக்கை, அதுவே ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றம் தந்தது. அந்த கம்பெனி மூடப்பட்டது, பிறகு ஒரூ கடையில் சேர்ந்து கஸ்டமர் சர்வீஸ்   பொறுப்பு கிட்டியது.. பிறகு நானே சொந்தமாக கடையை ஆரம்பிக்கும் வாய்ப்புக்கும் வழி வகுத்தது.

அயல் நாட்டில் பணி நிமித்தம் இருந்தாலும் உங்கள் குடும்பத்தினர் எவ்வாறு ஹிந்து பாரம்பரியத்தைப் போற்றி வருகிறீர்கள்?

அங்கு மாண்ட்ரீயல் இந்து தமிழ் சங்கம் நடத்தும்  அத்தனை நிகழ்ச்சிகளிலும் நாங்கள் எல்லோரும் ஆர்வத்துடன் கூடுவோம். எல்லா குடும்பங்களும் சேர்ந்து பங்கேற்றதின் மூலம் குழந்தைகளுக்கு நம் நாட்டின் உணவு, பாரம்பரியம், கலை , கலாச்சாரம், மொழி எல்லாம் கற்றுக்கொள்வதில் எந்த சிரமும் இல்லை என்பேன்.

முக்கியமான பண்டிகைகள் ஒன்றையும் விட்டு விடமாட்டோம். பொங்கல், தீபாவளி, விநாயக சதுர்த்தி, வருடப் பிறப்பு,  ஸ்கந்த ஷஷ்டி, பாரத சுதந்திர தினம், என்று எல்லாவற்றிலும் நம் நாட்டு பாரம்பரிய உடைகளில் கலந்து கொள்ளுவோம். நிகழ்ச்சியில் கலை விழா, இசை நிகழ்ச்சிகள், வினாடி வினா, பட்டிமன்றம், பேருரைகள் என்று நம் நாட்டில் எப்படி கொண்டாடுகிறோமோ அதற்கு சற்றும் குறையாமல் உற்சாகத்துடன்  இப்பொழுது மாண்ட்ரீயல் நகரிலேயே வசிக்கிறேன். முன்னர் இருந்த சின்ன ஊரில் இருந்து சுமார் 140 கி மீ பயணம் செய்து சங்க விழாக்களில் கலந்து கொள்ளுவோம். நம் இந்தியர்கள் மட்டும் இல்லை, என் பிரெஞ்சு தோழர்களும் பங்கேற்று,  நம் கோவிலுக்கும் செல்ல ஆரம்பித்து விட்டார்கள் சொல்லப் போனால் வெளிநாட்டில்  வாழும் ஒவ்வொருவரும் அறிவிக்கப் படாத கலாச்சாரத் தூதர்கள்’ தான் என்று எனக்குத் தோன்றுகிறது.

விருட்சங்கள் எவ்வளவு உயர்ந்தாலும்  வேரைத் துறப்பதில்லை;  மனிதர்களான நாம் எவ்வளவு  தொலைவில் இருந்தாலும் தாய் மண்ணையும் தாய் கற்றுக் கொடுத்த பண்பாட்டையும் மறக்கக் கூடுமோ?

(நிறைவுற்றது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *