வெற்றிக்கு உதவிடும் ஆகாயம்

நம் பள்ளிகளில் அலுவலகங்களில் பல பேச்சாளர்களின் “மோடிவேஷனல்ஸ் பீச்” எனப்படும் ஊக்கப்படுத்தும் பல பேச்சுகளை நாம் ஏற்கனவே கேட்டிருப்போம் எனவே அதை பற்றி நாம் இங்கு பார்க்கப்போவதில்லை, பஞ்ச பூதங்களில் இங்கு நம் வாழ்வின் வெற்றிக்கு உதவும் பேராற்றலான ஆகாயத்தின் சக்தியை நாம் எப்படி சரியாக பயன்படுத்தி எளிதாக வாழ்வில் வெற்றி பெறலாம் என காணலாம். “அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம்” எனும் சித்தர்கள் வாக்குப்படி இவை இரண்டும் பஞ்ச பூதங்களினாலும் அதன் கலப்பினாலும் ஆனவைதான். பஞ்ச பூதங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு பிரத்தியேக சக்தியும் குணமும் உண்டு. என்பதை நாம் அறிவோம்.

உலகமே சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படும் இந்த நேரத்தில் பஞ்ச பூதங்களினால் ஆன இவ்வுலகில் மனிதனால் நேரடியாக நீர், நிலம் மற்றும் காற்று எனும் மூன்று பூதங்களை எளிதில் மாசுபடுத்திவிட முடியும் ஆனால் நான்காவது பூதமான நெருப்பை யாராலும் மாசுபடுத்த முடியாது மாசுக்களை அகற்றும் அக்கினியை யராவது மாசுபடுத்த முடியுமா என்ன? ஐந்தாவது பூதமான ஆகாயத்தை மனிதனால் நேரடியாக மாசுபடுத்த முடியாது ஆனால் கண்ணுக்கு தெரியாத வகையில் மனிதகுலம் இதனையும் மாசுப்படுத்திதான் வருகிறது. ஆனால், ஆகாயம் அதை தன்னிடம் நீண்டகாலம் வைத்துக்கொள்வதில்லை. சரியான நேரம் காலம் பார்த்து அதை அந்த மனிதருக்கே இம்மையிலோ அல்லது மறுமையிலோ திருப்பி கொடுத்துவிடுகிறது. இப்படி நம் எண்ணங்களின் பலனை நமக்கு அப்படியே சரியாக திரும்ப கொடுக்கும் இந்த சக்தியை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்வின் வெற்றிகள் எளிதில் நம் வசமாகும். இதை நாம் தெரிந்து கொள்வதற்கு முன் ஆகாயம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்வோம்.

ஆகாயம் ஓர் அதிசயம்:

முதலில் ஆகாயத்தில் இருந்துதான் மற்ற பூதங்கள் அனைத்தும் தோன்றின என்பதால் உண்மையில் வரிசைப்படி இதுதான் முதல் பூதம். நாம் அன்னாந்து பார்க்கும் நீலவானம் என்பது ஆகாயம் அல்ல ஆகாயத்திற்கு “வெளி” என்றொரு பெயரும் உண்டு. “பார்க்குமிடம் எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமே” என தாயுமானவர் சொல்லியுள்ளது போல ஆகாயம் என்பது எங்கும் நிறைந்துள்ளது, அது என்னுள்ளும் உள்ளது, உங்களுக்குள்ளும் இருக்கிறது நம் இருவரிடம் உள்ள இடைவெளியிலும் நிறைந்து இருக்கிறது. இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் என்றால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அலைபேசியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். எங்கிருந்தோ நம் மொபைலுக்கு வரும் அழைப்பு ஒரு பிரத்தியேக எண் கொண்ட மின்காந்த அலைவரிசையாக மாற்றப்பட்டு வெளியிடப்படுகிறது, அந்த அலைவரிசை செயற்கைகோள் மற்றும் பலடவர்கள் வழியாக பயணிக்கிறது. அதற்கு தடைகள் ஏதும் கிடையாது.  அது நமக்குள்ளும் சுவற்றின் உள்ளும் தங்கு தடையின்றி பயணிக்கிறது எங்கும் நீக்க மற பரவுகிறது. ஆனால் அது தனக்கான சரியான அலைவரிசை உடைய எண்ணுக்கு மட்டும் சரியாக சென்று சேர்ந்து தன் பணியை செய்கிறது. அதுபோலதான் ஆகாயமும் இந்த உலகம் மட்டும் அல்ல இந்த பிரபஞ்சம் முழுவதிலும் அது நீக்கமற நிறைந்து இருந்து தன் பணியை சரியாக செய்து வருகிறது. சரி இதை எப்படி மனிதன் மாசுப்படுத்துகிறான்?ஆகாயத்தை மாசுபடுத்தாமல் நாம் அதை எப்படி நமக்கு ஏற்பபோல சரியாக பயன்படுத்திக்கொள்வது?

கண்ணுக்கு தெரியாத எங்கும் வியாபித்திருக்கும் ஒன்றை அதே போன்ற வேறு ஒன்றால் தான் மாசுபடுத்த முடியும் அதுதான் நமது “எண்ணங்கள்” நமது எண்ணங்களின் வலிமையை நாம் ஒரு போதும் முழுமையாக உணர்வதில்லை. ஒரு பொருளையோ சக்தியையோ நாம் அழிக்க முடியாது ஆனால் அதை நாம் வேறு ஒன்றாக மாற்றலாம் என்பது அறிவியல் விதி எப்படி எந்த ஒரு பொருளுக்கும் சக்திக்கும் அழிவில்லையோ அதேபோல நம் ஏண்ணங்களின் சக்தியும் மாற்றமுடியுமே அன்றி அழிக்கமுடியாது, தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களினால் மட்டுமே மாற்றமுடியும்.

வழிகாட்டும் முன்னோர்கள்:

இந்த கோட்பாட்டை ஆதிகாலத்திலேயே தெளிவாக அறிந்திருந்த நம் முன்னோர்கள் இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள மந்திரங்கள் உருவாக்கி வைத்துள்ளனர். நம் எண்ணங்களின் ஆற்றல் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையுடைய ஒலிவடிவுடன் கூடிய மந்திர சொற்களாக மாற்றியமைக்கப்பட்டு மந்திரங்கள் ஓதப்படுகின்றன. அவையும் இந்த ஆகாயம் மூலமாக பிரபஞ்சத்தில் பரவி அதற்கான பலனை பிரபஞ்ச கோட்பாடு மற்றும் ஆற்றலின் துணையால் நமக்கு தக்க தருணத்தில் தருகின்றன. நம் தாத்தா பாட்டிகளும் கூட நம் தலைக்கு மேலே சில தேவதைகள் சுற்றி கொண்டிருப்பார்கள் நீ எதாவது சொல்லும்போது அவர்கள் “ததாஸ்து” என சொல்லிவிட்டால் அது நடந்துவிடும் அதனால் எப்போதும் நல்லதே பேசு என சொல்ல கேள்விப்பட்டிருப்போம் அது நம் எண்ணங்களை சீர்படுத்தத்தான் சொல்லப்பட்டது என்பது நமக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நாம் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்தும் எண்ணங்கள்கூட அதற்கான ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பிரபஞ்சத்தில் பதிவாகின்றன.அந்த எண்ணங்களின் வீரியம், சொல் அமைப்பு, ஆழம், மீண்டும் மீண்டும் பதியப்படும் ஒரேபோன்ற பதிவுகள், மனநிலை போன்ற அனைத்தும் அதற்குரிய காலத்தில் நம் கிரகிக்கும் ஆற்றல், மனநிலை, சூழல் போன்ற சிலவரையறைகளை பொறுத்து நமக்கு அதன் பலனாக திருப்பி அனுப்பப்படுகின்றன. “நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” எனும் கீதையின் கூற்றும் நமக்கு இதனை உறுதிப்படுத்துகிறது. உலகில் உள்ள அனைத்து வழிபாட்டு முறைகளும் இதனை தங்களுக்கு ஏற்ப வெவ்வேறு சொற்களில் உறுதிப்படுத்துகிறது. இத்தகைய ஆற்றலை சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள் தங்கள் வாழ்வில் தாங்கள் நினைத்ததை எளிதாக அடைகின்றனர். இதை தவறாக பயன்படுத்துபவர்கள் அதற்கான பலனை அனுபவிக்கின்றனர். கவிஞர் கண்ணதாசன்கூட தன் அர்த்தமுள்ள ஹிந்து மதத்தில் ஓ.ஏ.கே தேவர் கடவுளை அணுக தெரிந்தவர் அவர் கேட்பது எல்லாம் அவருக்கு கிடைக்கிறது எனகு றிப்பிட்டிருப்பார். என்ன விதைக்கிறோமோ அதுவே நமக்கு கிடைக்கிறது என பெரியவர்கள் சொன்னது உழவுக்கு மட்டும் அல்ல வாழ்க்கைக்கும்தான்.

எண்ணமே வாழ்க்கை:

நம் எண்ணங்களை முறைப்படுத்தி பிரபஞ்ச சக்தியை சரியாக அணுக தெரிந்திருந்தால் நாமும் நமக்கு தேவையான பலவற்றையும் எளிதாக பெறலாம். பல தவறுகளையும் தோல்விகளையும் நடக்காமல் தவிர்த்துவிடலாம். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

இறை ஆற்றல் அல்லது பிரபஞ்ச சக்தி என எப்படி பெயரிடப்பட்டாலும் சரி நமக்கு மேல் ஒரு பெரிய சக்தி இருந்து இந்த உலகை வழிநடத்துகிறது என ஆழமாக நம்புங்கள். நம் குறிகோள் எது என தெளிவாக தீர்மானியுங்கள். அதற்கு நமக்கு எது முதல் தேவை, எது அடுத்த தேவை எது தேவையற்றது என எண்ணங்களை முறைப்படுத்துங்கள். குறிகோளை பற்றி அதிகம் சிந்தியுங்கள். எப்போதும் நேர்மறையான எண்ணங்களையே வெளிப்படுத்துங்கள். பெரிய நீண்ட வார்த்தைகளை உடைய எண்ணங்களை தவிர்த்து ஒரு சில வாக்கியங்களை கொண்ட சிறிய நேர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். உதாரணமாக “நான் நன்றாக படித்து +2வில் முதல் ரேங்க் வாங்கி இந்த கல்லூரியில் இந்த டிகிரி படித்து பிறகு ஐ.ஏ.எஸ் படித்து கலெக்டர் ஆகவேண்டும்” என நீண்ட எண்ணத்தைவிட “நான்ஐ.ஏ.எஸ்ஆகவேண்டும்” என சிறிய நேர்மறையான எண்ணத்தை வெளிப்படுத்துங்கள். உபயோகப்படுத்தும் வார்த்தைகளில் எவ்விதத்திலும் எதிர்மறை வார்த்தைகளும் இல்லாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் உதாரணமாக எனக்கு உடலில் நோயே வரக்கூடாது என்பதற்கு பதிலாக நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என எண்ணுங்கள். ஒரே எண்ணத்தை திரும்ப திரும்ப சிந்தித்து அதை மேலும் வலிமையாக்குங்கள். தேவையற்ற எண்ணங்களில் மனதை சிதறவிடாதீர்கள். பொறுமையாகவும் அமைதியாகவும் இருங்கள். தியானம் மிக முக்கியம். மனப்பூர்வமாக எண்ணும் எண்ணங்களுக்கு வலிமை அதிகம் அதே நேரத்தில் அதற்கான கடின உழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாக தேவை என்பதை மறவாதீர்கள். பயம் கோபம், காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, வஞ்சம், பொறாமை, துக்கம், வீண் கவலை போன்ற எதிர்மறை குணங்களை தூக்கி எறிந்து அந்த வெற்றிடத்தில் அன்பு, பொறுமை, சகிப்புதன்மை, மென்மை, கனிவு, இரக்கம், கடவுள் பக்தி, தேசபக்தி போன்ற நல்ல எண்ணங்களை விதையுங்கள். எண்ணங்களே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது எனவே அதை சரியாக எண்ணுவோம் வாழ்க்கையில் வெற்றி காணுவோம்

தோல்வி தான் வெற்றியின் ரகசியமே:

ஒரு வேளை நம் எண்ணத்தின் பலம் குறைவு, எதோ ஒரு விதத்தில் அது நம் வரம்பிற்கு மீறிய செயல், கடவுளின் விருப்பம், குடும்பசூழல், சமுதாயசூழல் போன்ற எதோ ஒரு சில காரணங்களினால் நம் குறிக்கோள் நிறைவேறாமல் போனால் அதற்காக மனம் தளராதீர்கள் உங்கள் குறிக்கோளை வேறு நல்ல பாதையில் திருப்பி அதில் முன்பைவிட அதிக முனைப்புடன் ஈடுபட்டு வெற்றி காணூங்கள். எண்ணங்களே விருப்பங்கள் ஆகின்றன, விருப்பங்களே லட்சியங்கள் ஆகின்றன, லட்சியங்களே உலகை ஆள்கின்றன எனவே நல்ல எண்ணங்களை விதைப்போம் உயர்ந்த பலனை பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *