விடுதலையின் அமிர்தப் பெருவிழாவையொட்டி, ஆயுதப் படையினரின் தீரச் செயல்கள், தியாகங்கள் ஆகியவை குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வை பரப்பும் வகையில், ‘வீர் கதா’ என்னும் தனித்துவமான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனையொட்டி, கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட போட்டிகளில், 4,788 பள்ளிகளைச்சேர்ந்த 8.04 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், கட்டுரைகள், கவிதைகள், ஓவியங்கள் ஆகியவற்றை படைத்து கலந்து கொண்டனர். பல்வேறு சுற்று மதிப்பீட்டிற்கு பின்னர் 25 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சூப்பர் 25 என்ற பெயரில் அறிவிக்கப்பட்டனர். இந்த 25 மாணவர்களை டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி கௌரவித்தார். ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அஜய் பட், விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் வி ஆர் சௌத்ரி, கடற்படை தளபதி அட்மிரல் ஆர். ஹரிக்குமார், பாதுகாப்புத்துறை செயலர் டாக்டர் அஜய்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ராணுவ பள்ளிகள், கண்டோன்மெண்ட் வாரியம் ஆகியவற்றைச் சேர்ந்த 300 தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 400க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காணொலி மூலம் கலந்து கொண்டனர். இதில், உரையாற்றிய ராஜ்நாத் சிங், “மாணவர்களின் திறமைகளையும், படைப்பாற்றலை பாராட்டுகிறேன். விடுதலைப் போராட்ட வீரர்கள், பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், குதிராம் போஸ் போன்றவர்களின் தியாகத்தையும், தீரத்தையும் சித்தரித்த மாணவர்களையும் பாராட்டுகிறேன். இந்த அச்சமற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள், ராணுவ வீரர்கள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களது அன்புக்கு பாத்தியமானது ஒரே பாரதமாகும். நாட்டுப்பற்று என்ற பொதுவான கயிற்றால் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். மகாத்மா காந்தி, மாரட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, பகத் சிங், அஸ்பாக் உல்லாகான், லால்பகதூர் சாஸ்திரி போன்ற விடுதலைப்போராட்ட வீரர்களின் தியாகங்களை மாணவர்கள் தங்களுக்கு உந்து சக்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்ற கேட்டுக்கொண்டார்.