வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறு கேட்டாலே வீறு எழுவோம்

தமிழகம், பாஞ்சாலங்குறிச்சியில் 1760 ஜனவரி 3-ல் திக்குவிசய கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதிக்கு பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். வீரசக்கம்மாளை திருமணம் செய்தார்.

தனது 30 ஆம் வயதில் அரியாசனம் ஏறினார். அப்போது ஆங்கிலேயர்கள் ராஜ்யங்களில் வரிவசூல் செய்து வந்தனர். பல மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். கப்பம் கட்ட மறுத்தார் கட்டபொம்மன்.

இதனால் கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள் கட்டபொம்மன் மீது போர் தொடுத்தனர். போரில் கடுமையாக சண்டையிட்டும் அவரது ராஜ்ஜியம் கவரப்பட்டது.

கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கேட்டார். ஆனால் ஆங்கிலேயர்களுக்காக பயந்து மன்னன், கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தார்.

ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டார். விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்றனர் வெள்ளையர்கள்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை கட்டபொம்மன் மறுக்கவில்லை, உயிர்ப்பிச்சை கேட்கவில்லை. கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்கு மேடையேறினார் கட்டபொம்மன்.

“இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்றும் கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.

கட்டபொம்மனின், “வரி, வட்டி, திறை, கிஸ்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி” என்ற வீர வசனத்தை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் இன்று.