சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர், கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த ஒரு புகாரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திக்க கட்சி அலுவகத்திற்கு சென்ற தன்னையும்தனது மனைவி குழந்தைகளையும் கட்சி அலுவலகத்தில் இருந்த வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் தாக்கியதாகவும் தங்களது 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை பறித்துக் கொண்டதாகவும் கூறி இருந்தார். மேலும், இந்த தாக்குதலுக்கு திருமாவளவன் தான் காரணம் எனவும் கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வீரப்பன், திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை முயற்சி, திருட்டு, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டது. பின்னர் இவ்வழக்கு வேளச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். கடந்த 11 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் உடனடியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி வேதா அருண் நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர், “நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் முதலில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர், வேளச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு சம்பந்தமான ஆவணங்களை கண்டுபிடிக்க கூடுதல் அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களையும், வழக்கின் விசாரணை நிலை குறித்தும் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.