அனைத்து முரண்பாடுகளையும் மீறி, போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் பாரத சமூகத்தினரை மீட்க நமது பாரதத்தின் தீரமிகு விமானப்படை துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அத்தகைய ஒரு முயற்சியாக பாரதத்தின் வீரர்கள் ஏப்ரல் 27 மற்றும் 28 இடைப்பட்ட இரவில், சூடானில் உள்ள வாடி சயீத்னாவிலிருந்து மோசமான விமான ஓடுதளம் மற்றும் மோசமான இரவு பார்வைக்கு மத்தியில் 121 பேரை தனது சி 130ஜேசரக்கு மற்றும் ராணுவ வீரர்கள் போக்குவரத்து விமானத்தில் வெற்றிகரமாக மீட்டுள்ளது. இந்த மோசமான விமான ஓடுதளம், வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடான் தலைநகர் கார்ட்டூமுக்கு வடக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது. பாரத மக்களை மீட்க நமது நாடு அனுப்பிய போர் கப்பல் நிறுத்தப்பட்டிருந்த போர்ட் சூடானை சென்றடைய இங்குள்ளவர்களுக்கு வேறு எந்த வழியும் வழியும் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பாரத விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் விங் கமாண்டர் ஆஷிஷ் மோகே இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “மீட்கப்பட்ட இந்தப் பயணிகளில் கர்ப்பிணிப் பெண் உட்பட நோயாளிகளும் அடங்குவர். அவர்கள் சூடான் துறைமுகத்தை அடைய வழியில்லாமல் இருந்தனர். கார்ட்டூமில் உள்ள பாரதத்தின் பாதுகாப்பு இணைப்பாளர், வாடி சயீத்னா விமான ஓடுதளத்திற்கு மீட்புக் குழுவை வழிநடத்தினார். மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வருவதற்கும் விமான ஓடுதளத்தை அவர்கள் அடையும் வரை எங்கள் அதிகாரிகளுடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். விமான ஓடுதளத்தின் மோசமான சூழ்நிலையால், விமான ஓடுதளத்தின் மேற்பரப்பும் மோசமாகிவிட்டது. எரிபொருள் அல்லது வழிசெலுத்தல், தரையிறங்கும் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை உதவிகள் கூட அங்கு இல்லை.
ஆயினும்கூட, இதுபோன்ற சூழ்நிலைகளில் நமது துணிச்சலான விமனப்படை வீரர்கள், வானூர்தி ஓடுபாதையை நெருங்கியதும், விமானக் குழுவினர் தங்கள் எலக்ட்ரோ ஆப்டிகல், இன்ஃப்ரா ரெட் சென்சார்களைப் பயன்படுத்தி ஓடுபாதையில் எந்தத் தடைகளும் இல்லாமல் இருப்பதையும், அதன் அருகில் எந்தத் தீய சக்திகள் ஏதுமில்லை என்பதையும் உறுதிசெய்தனர். பின்னர், இரவு பார்வை கண்ணாடிகளின் (என்.வி.ஜி) உதவியுடன் வெற்றிகரமாக விமான ஓடுதளத்தில் தரையிறங்கி மக்களைக் காப்பாற்றினர். விமானம் இறங்கிய பிறகும் கூட பாதுகாப்பு காரணங்களுக்காக விமான இன்ஜின்கள் இயங்கிக் கொண்டே இருந்தன. எட்டு ஐ.ஏ.எப் கருட் கமாண்டோ வீரர்கள் உடனடியாக செயல்பட்டு பயணிகளையும் அவர்களது சாமான்களையும் விமானத்திற்குள் ஏற்றினர். பின்னர், தரையிறங்கியதைப் போலவே, இரவுக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி விளக்குகள் எரியாத அபாயகரமான ஓடுபாதையில் புறப்பட்டு சௌதியின் ஜெட்டா விமான நிலையத்தை அடைந்தனர்” என கூறினார். மனிதாபிமான உதவி, இயற்கை பேரிடர் ஆதரவு, விமானம், தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பாரதத்தின் விமானப்படை, சி 130 ஜே விமானங்களை பயன்படுத்துகிறது. நேபாள பூகம்பத்தின் போது அங்கு முதலில் தரையிறங்கி ஆதரவை வழங்கிய விமானமும் சி 130 ஜே தான் என்பது குறிப்பிடத்தக்கது.